விஷம் குடித்து தம்பதி தற்கொலை
கிணத்துக்கடவு, கல்லாபுரத்தை சேர்ந்தவர் சற்குணம், 50. அவரது மனைவி வனிதா, 40. கல்லாபுரத்தில், சற்குணம் டெய்லர் கடை வைத்திருந்தார். இவருக்கு குடி பழக்கம் இருந்துள்ளது. அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதால், இவருக்கும், மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.இந்நிலையில், இருவரும் மனம் உடைந்து வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்து குடித்தனர். அதன்பின், சற்குணம், மகன் ரமேஷ்குமாருக்கு போன் செய்து, தானும், மனைவியும் விஷம் குடித்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின், வீட்டிற்கு விரைந்த ரமேஷ்குமார், '108' ஆம்புலன்ஸ் வாயிலாக, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றோரை அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கணவன், மனைவி இருவரும் இறந்தனர். இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மதுவுடன் விஷம் குடித்தவர் பலி
பொள்ளாச்சி, ஜமீன் கோட்டாம்பட்டியை சேர்ந்தவர் ஆறுசாமி, 60, கூலி தொழிலாளி. இவர் கிணத்துக்கடவு, தேவராயபுரத்தில் உள்ள தனது அம்மா வீட்டில் இருந்து வேலை செய்து வந்தார்.இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், மது போதையில் இருந்த போது மதுவில் விஷம் கலந்து குடித்து இறந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். லாட்டரி விற்றவர் கைது
நெகமம், அனுப்பர்பாளையத்தை சேர்ந்தவர் முகமது முஸ்தப்பா,56,பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில், சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை நடப்பதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து முகமது முஸ்தப்பா கடையில் போலீசார் சோதனை செய்தனர். இதில், சட்ட விரோதமாக,84கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது உறுதியானதை தொடர்ந்து, கடையில் இருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும்1,550ரூபாய் பணம் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். ஆற்றில் பெண் சடலம்
பொள்ளாச்சி, குளத்துார், கருப்பராயன் கோவில் அருகே உள்ள ஆழியாறு ஆற்றில் அடையாளம் தெரியாத, 55 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மிதப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தி, சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், கொலை செய்யப்பட்டாரா, தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்து இறந்தாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.