பொள்ளாச்சி;வங்கிக் கடன் உதவியுடன் தொழில் துவங்க விருப்பமுள்ள, பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.கோவை வேளாண் இணை இயக்குநர் வெங்கடாசலம் அறிக்கை:கோவை மாவட்டத்தில், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில், பட்டப்படிப்பு முடித்து வேலையில்லாத இளைஞர்களை, தொழில் முனைவோராக்கும் திட்டம், 2024--25ம் ஆண்டு செயல்படுத்தப்படவுள்ளது.அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் துவங்க, பட்டதாரி ஒருவருக்கு தலா, ஒரு லட்சம் வீதம், 3 பட்டதாரி இளைஞர்களுக்கு நிதி உதவி, பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.பயனாளி தனது மூலதனத்தில், வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ், அனுமதிக்கக் கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில்கள் நிறுவ வேண்டும். வங்கிக் கடன் உதவியுடன் கூடிய தொழில்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பயனாளிகள் மானிய தொகை போக, மீதமுள்ள தொகைக்கு வங்கிக் கடன் பெறுவதற்கான சான்றை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விபரங்களை, http://pmfme.mofpi.gov.inhttp://agriinfra.dac.gov.inஇணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். பயனாளி, 21 முதல் 40 வயதுக்குள்ளும், இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவராக இருத்தல் வேண்டும்.அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்கக் கூடாது. விண்ணப்பதாரர் கம்ப்யூட்டர் திறன் பெற்றிருக்க வேண்டும். ஒரு குடும்பத்திற்கு ஒரு பட்டதாரி மட்டுமே நிதி உதவி பெறத் தகுதியானவர். வங்கி வாயிலாக கடன் பெற்று தொழில் புரிவோர் நிறுவனத்தின் உரிமையானது, தனியுரிமையாக இருத்தல் வேண்டும்.இதற்கு, 10 மற்றும் 12ம் வகுப்பு சான்று, பட்டப்படிப்பு சான்று, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பயனாளியின் வங்கி கணக்கு புத்தகம், வங்கியிடம் இருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம் மற்றும் தொடங்க உள்ள தொழில் குறித்த விபரங்கள் அடங்கிய ஆவணங்கள் இருத்தல் வேண்டும்.பட்டதாரிகள் 'அக்ரிஸ் நெட்' வலைதளத்தில் விண்ணப்பித்து, அதன் நகலை விரிவான திட்ட அறிக்கையுடன் கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களில் சமாப்பிக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.