பொள்ளாச்சி:அதிக மாணவர்களை உள்ளடக்கிய அரசுப்பள்ளிகளில், 'கேன்டீன்' வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.பள்ளிகள் காலையில் தொடங்கும் நேரத்தை, அந்தந்த மாவட்ட சூழலுக்கு ஏற்ப மாற்றி கொள்ளலாம், என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அவ்வகையில், பெரும்பாலான பள்ளிகள், காலை, 9:15மணி முதல், மாலை, 4:15மணி வரை செயல்படுகின்றன.அவ்வேளையில், மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது; பாதுகாப்பு கருதி, இதை அனைத்து பள்ளிகளும் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்விதிமுறை, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பெரும்பாலான பள்ளிகளில் பின்பற்றப்படுகிறது. இருப்பினும், சில பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்கள், பல இடங்களில் சீருடையில் சுற்றித்திரிவதை காண முடிகிறது.அவர்கள், மதிய உணவு எடுத்து வராத காரணத்தால், அருகே உள்ள உணவகங்களுக்குச் சென்று சாப்பிடுவதாகவும், பாட வகுப்புக்கு தேவையான உபகரணங்கள் வாங்கச்செல்வதாகவும் தெரிவிக்கின்றனர்.இதேபோல், கேன்டீன் வசதி இல்லாத பள்ளிகளை மையப்படுத்தி வளாகத்தின் அருகே, சுகாதாரமின்றி தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை உட்கொள்ளும் மாணவர்கள், வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.வரும், 10ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவ, மாணவியரின் தேவையை உணர்ந்து, அரசுப்பள்ளிகளில் கேன்டீன் வசதி ஏற்படுத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.பெற்றோர்கள் கூறியதாவது: தனியார் பள்ளிகளில் மட்டும், சிறிய அளவிலான கேன்டீன் நடத்தப்படுகிறது. இதேபோல, மாணவர் எண்ணிக்கை அதிகம் கொண்ட அரசுப்பள்ளிகள் அனைத்திலும், சிற்றுண்டி உள்ளிட்ட உணவுப்பொருட்கள் கிடைக்கும் வகையில், கேன்டீன் வசதி ஏற்படுத்தலாம்.நொறுக்குத்தீனிகளை தவிர்த்து, சத்தான உணவுப்பொருட்கள் விற்பனை செய்யலாம். இதற்கு, பெற்றோர் ஆசிரியர்கள் கழகம், தன்னார்வலர்கள் பங்களிப்பு அவசியம். இதன் வாயிலாக, எக்காரணத்தையும் கூறி, பள்ளியில் இருந்து மாணவர்களும், ஆசிரியர்களும் வெளியேற முடியாது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.