| ADDED : ஆக 07, 2024 11:13 PM
கோவை, - கோவை நகர் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளை, நமது நாளிதழில் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து, நகரமைப்பு பிரிவினர் அகற்றி வருகின்றனர்.கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிக ளில், ஹோப்ஸ் காலேஜ், செல்வபுரம், காமராஜபுரம், கணபதி, டெக்ஸ்டூல் பாலம் மற்றும் கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருந்தன. இவற்றை நகரமைப்பு பிரிவினர் அகற்றாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.இதுதொடர்பாக, கடந்த, 5ம் தேதி வெளியான நமது நாளிதழில் படங்களுடன் செய்தி வெளியிட்டோம். அவற்றை அகற்ற, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார்.நகரமைப்பு அலுவலர் குமார் தலைமையிலான குழுவினர், அந்தந்த மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த விளம்பர பலகைகளை அகற்றி வருகின்றனர்.செல்வபுரம் சொக்கம்புதுார் ரோடு, செல்வபுரம் ராமமூர்த்தி ரோடு, காந்திபுரம் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் அருகே, டெக்ஸ்டூல் பாலம் பகுதி, கோல்டுவின்ஸ், திருச்சி ரோட்டில் பெர்க்ஸ் ஆர்ச் ரோடு பகுதியில் இருந்த விளம்பர பலகைகளை மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அகற்றினர். இப்பணி தொடர்ந்து நடைபெறும்; இரும்பு சட்டங்களை அகற்றுவதற்கான பணி விரைவில் மேற்கொள்ளப்படும் என, நகரமைப்பு அலுவலர் குமார் தெரிவித்தார்.