உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரண்டு ஆண்டுகளுக்கு மின் கட்டண உயர்வை நிறுத்த சைமா வேண்டுகோள்

இரண்டு ஆண்டுகளுக்கு மின் கட்டண உயர்வை நிறுத்த சைமா வேண்டுகோள்

கோவை : 'தமிழக தொழில்துறை மீண்டு வருவதற்கு, இரண்டு ஆண்டுகளுக்கு மின் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (சைமா) தலைவர் சுந்தரராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக நுாற்பாலைகள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. பருத்தி மற்றும் செயற்கை இழைகளுக்கு இதர மாநிலங்களை சார்ந்துள்ளன. எரிபொருள் மற்றும் போக்குவரத்து செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளதால், குஜராத், மஹாராஷ்டிரா போன்ற மூலப்பொருட்கள் உபரியாக உள்ள மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் உள்ள ஒரு நுாற்பாலை, ஒரு கிலோ மூலப்பொருளுக்கு ரூ.5 முதல் ரூ.7 வரை கூடுதலாக செலவிடுகிறது.மஹாராஷ்டிராவில், நாடா இல்லாத தறிகளை விசைத்தறிகளாக கருதி, சலுகை விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது; தமிழகத்தில் அவ்வாறு வழங்கப்படுவதில்லை. தமிழகத்தில் ஓபன் எண்ட் மற்றும், 85 சதவீத சிறிய ஆலைகள் உட்பட, 2,500 நுாற்பாலைகள் உள்ளன. மூன்றாண்டுகளில், 40 சதவீதம் மின் கட்டணம் கடுமையாக உயர்ந்ததால், ஆலைகள் லாபகரமற்றதாகி விட்டன.தமிழக ஜவுளித்துறை நேரடியாக, 60 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. உயர் மின்னழுத்த நுகர்வோருக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.8.65ல் இருந்து ரூ.9.09 என மின் கட்டணத்தை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்தியிருக்கிறது. அதாவது, 4.83 சதவீதம் உயர்த்தி அறிவித்துள்ளது. இதனால் தொழில்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே, மின் கட்டண உயர்வை பரிசீலிக்க வேண்டும். நுகர்வோர் விலை குறையீட்டை மின் கட்டணத்துடன் இணைக்க வேண்டும் என முன்மொழிந்த போதே,தொழில் துறையினர் எதிர்ப்பு தெரிவித்தோம். எங்களது வேண்டுகோளை அரசு பரிசீலிக்கவில்லை.பெரிய அளவிலான முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்க்க, முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு மின் கட்டண உயர்வு தடையாகவும், எதிர்விளைவையும் ஏற்படுத்தும். கொரோனா தொற்று பாதிப்பு, உக்ரைன்-ரஷ்யா போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக ஏற்பட்ட எதிர்பாராத மற்றும் நீண்ட கால மந்தநிலையில் இருந்து, தொழில்துறை மீண்டு வரும் வரை, இரு ஆண்டுகளுக்கு மின் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்.இவ்வாறு, சுந்தரராமன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை