பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில், ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட, 250 கிலோ மாம்பழங்கள், பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.பொள்ளாச்சி நகரில் உள்ள பழக்கடைகள் மற்றும் மொத்த விற்பனை கடைகளில், உணவு பாதுகாப்பு துறையினர் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர்.மாவட்ட நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சுப்புராஜ், வேலுசாமி மற்றும் நகராட்சி சுகாதாரத்துறையினர் அடங்கிய குழுவினர், காந்தி மார்க்கெட் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள 10 கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.அதில், ஒரு கடையில், சிறிய ரசாயனப் பொட்டலங்களை, ஒவ்வொரு பழ பெட்டிகளுக்குள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அதன்பேரில், ரசாயனம் உதவியுடன் பழுக்க வைக்கப்பட்ட 250 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நகராட்சி குப்பைக்கிடங்கில் இயற்கை உரம் தயாரிக்க கொட்டி அழிக்கப்பட்டது.தொடர்ந்து, கடைக்காரருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இதுபோன்று விதிமீறலில் ஈடுபடக்கூடாது என, எச்சரிக்கப்பட்டது.உணவு பாதுகாப்பு துறையினர் கூறியதாவது: பறிமுதல் செய்யப்பட்ட பழங்களின் சந்தை மதிப்பு, 20 ஆயிரம் ரூபாய். ஆய்வில் செயற்கை முறையில் பழுக்க வைக்க பயன்படுத்திய ரசாயன பாக்கெட்டுகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.இதுபோன்று, கார்பைட் கல், எத்திலீன் ரசாயன பவுடர் பாக்கெட்டுகளை கொண்டு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை உண்பதால், வயிறு தொடர்பான பிரச்னைகள், கண் எரிச்சல், சரும அலர்ஜி, வாந்தி, பேதி போன்ற உபாதைகள் உண்டாகலாம்.சில நேரங்களில் சுவாசம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதில், ஆர்சானிக் மற்றும் பாஸ்பரஸ் இருந்தால் புற்றுநோய் உண்டாகும். உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு உடல் வலுவிழக்கச் செய்யும்.கோவை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இது போன்ற திடீர் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இத்தகைய விதிமீறல் கண்டறியப்பட்டாலும், 94440 42322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.