உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மழையால் மண் சரிவு; பாட்டி, பேத்தி பலி

மழையால் மண் சரிவு; பாட்டி, பேத்தி பலி

வால்பாறை:வால்பாறை அருகே, கனமழையால் மண் சரிவு ஏற்பட்டதில், வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த பாட்டி, பேத்தி பரிதாபமாக இறந்தனர்.கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ளது சோலையாறு அணை. இங்குள்ள இடதுகரை பகுதியில் ஆறுமுகத்தின் மனைவி ராஜேஸ்வரி, 57, வசித்து வந்தார். அவருடைய மகள் சுகுணா வெளியூரில் வேலை செய்தவதால், 10ம் வகுப்பு படிக்கும் அவரது மகள் வழி பேத்தி தனப்பிரியா, 15, பாட்டியுடன் தங்கியுள்ளார்.இந்நிலையில், வால்பாறை பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்த போது, சோலையாறு இடதுகரை பகுதியில் அதிகாலை, 4:00 மணிக்கு மண்சரிவு ஏற்பட்டது. இதில், ராஜேஸ்வரியின் வீட்டு மண்சுவர் இடிந்தது. வீட்டினுள் துாங்கிக் கொண்டிருந்த, பாட்டியும், பேத்தியும் இடிபாடுகளில் சிக்கி, சம்பவ இடத்திலேயே இறந்தனர்.அப்பகுதி மக்கள், இருவரது உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஷேக்கல்முடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.இந்நிலையில், மழை பாதிப்பால் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, முதற்கட்ட விபத்து நிவாரண நிதியாக, தலா, 3 லட்சம் வீதம், 6 லட்சம் ரூபாய் வழங்கினார். அவருடன், பொள்ளாச்சி சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா, டி.எஸ்.பி, ஸ்ரீநிதி, தாசில்தார் சிவகுமார் இருந்தனர்.

சுவர் இடிந்து வாலிபர் பலி

பொள்ளாச்சி அருகே, திப்பம்பட்டி அண்ணா நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அன்பழகன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் ஹரிஹரசுதன், 21, வளர்ப்பு நாயுடன், வீட்டில் நேற்று முன்தினம் இரவு துாங்கினார்.காற்றுடன் கனமழை பெய்தபோது, மயிலாத்தாள் என்பவரது வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து, அன்பழகனின் ஓட்டு வீடு மீது விழுந்தது. இதில், வீட்டில் துாங்கிக்கொண்டு இருந்த ஹரிஹரசுதன் சம்பவ இடத்திலேயே இறந்தார். வளர்ப்பு நாய்க் குட்டியும் இறந்தது. கோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.உயிர் இழந்தவரின் குடும்பத்துக்கு, தலா 3 லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டது.

ஆனைமலையில் பாதிப்பு

ஆனைமலை வக்கம்பாளையத்தில், கனகராஜ் என்பவரது ஓட்டு வீட்டின் பக்கச் சுவர் இடிந்து விழுந்தது. அதில், யாருக்கும் பாதிப்போ, பொருட்சேதமோ இல்லை. காளியாபுரத்தில், அருணாதேவியின் ஓட்டு வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதுகுறித்து அதிகாரிகள், போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி