தொண்டாமுத்தூர் : கோவை, பேரூர் படித்துறையில், ஆடி அமாவாசை தினத்தில், முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க, பல்லாயிரக்கானோர் திரண்டனர்.ஆடி அமாவாசை தினத்தன்று ஆற்றில் நீராடி, முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம். இதன் மூலம், முன்னோர்களுக்கு முக்தி கிடைப்பதோடு, குடும்பத்திற்கும் நல்லது நடக்கும் என்பதால், தமிழகத்தில், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய தினங்களில், நீர் நிலைகளில் ஏராளமான பொதுமக்கள் தங்களின் முன்னோர்களை வழிபடுவார்கள்.குறிப்பாக, முக்தி ஸ்தலம் எனப்படும் பேரூரில், முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபட ஆண்டு முழுவதும் பல்வேறு பகுதியில் இருந்தும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.நேற்று ஆடி அமாவாசை என்பதால், அதிகாலை முதலே பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றுக்கு, பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், தங்களின் குடும்பங்களுடன் வந்து, தங்களின் முன்னோர்களுக்கு, எள், அரிசி, பழத்துடன் பிண்டம் வைத்து, புரோகிதர் முன்னிலையில் வழிபாடு நடத்தினர்.அதன்பின், பிண்டத்தை நொய்யல் ஆற்றில் கரைத்து, முன்னோர்களை வணங்கினர். தொடர்ந்து பசு மாடுகளுக்கு, அகத்தி கீரைகளையும், ஏழை எளியோர்களுக்கு அன்னதானமும் வழங்கினர். பட்டீஸ்வரர் கோவில் முன்பு உள்ள, விளக்கு கம்பத்தின் முன்பு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.ஆடி அமாவாசை முன்னிட்டு, தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்து, முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.இதனால், பேரூரில் எந்த திசை திரும்பினாலும், பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் தலைகள் மட்டுமே காட்சியளித்தது.