பொள்ளாச்சி;பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியின் விளையாட்டுத்துறை சார்பில், எஸ்.டி.சி., நிறுவனர்கள் நினைவு 7வது மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியருக்கான குழு விளையாட்டுப்போட்டிகள், கல்லுாரி மைதானத்தில், 'நாக் அவுட்' முறையில் நடைபெற்றன.மாணவர்கள் பிரிவில், வாலிபால் போட்டியில் என்.ஜி.என்.ஜி., பள்ளி முதலிடமும், செஞ்சேரிமலை அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும் பெற்றது. கூடைப்பந்து போட்டியில் விஷ்வதீப்தி பள்ளி முதலிடமும், பி.கே.டி., பள்ளி இரண்டாமிடமும் பெற்றது. பூப்பந்து போட்டியில் என்.ஜி.என்.ஜி., பள்ளி முதலிடமும், கிருஷ்ணா வித்யா மெட்ரிக் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.மாணவியர் பிரிவில், கோ-கோ போட்டியில் கிணத்துக்கடவு விவேக் வித்யாலயா பள்ளி முதலிடமும், மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும் பிடித்தன. பூப்பந்து போட்டியில் என்.ஜி.என்.ஜி., பள்ளி முதலிடமும், உடுமலை விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.பரிசளிப்பு விழாவில், கல்லுாரி தலைவர் சேதுபதி தலைமை வகித்தார். எஸ்.டி.சி.,யின் முன்னாள் மாணவர் சர்வதேச வாலிபால் வீரர் மதுசூதனன், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.பணி ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர்கள் அன்பரசன், சண்முக வேல், உமர்பரூக் மற்றும் கல்யாண சுந்தரம் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லுாரி உடற்கல்வித்துறை இயக்குனர் பாரதி தலைமையில் ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.