| ADDED : ஏப் 28, 2024 11:39 PM
கிணத்துக்கடவு;கோடை காலத்தில், சிறுவர்கள் நுங்கு வண்டி, கிணறு மற்றும் வாய்காலில் நீச்சல், மாட்டு வண்டி பயணம் மற்றும் பல குழு விளையாட்டுகளில் ஈடுபட்டனர். இந்த விளையாட்டுகள் அனைத்தும், இன்றைய குழந்தைகளுக்கு தெரியாமலே போய்விட்டது.தற்போது உள்ள குழந்தைகள் இது போன்ற விளையாட்டுகளில் ஆர்வமும் காட்டுவதில்லை. அதற்கு மாறாக, மொபைல்போன்களில் விளையாட்டு, சமூக வலைதள பக்கங்களில் மூழ்கியுள்ளனர். இதை தவிர்த்து குழந்தைகள் மாலை நேரத்தில் வெளியில் விளையாட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'டிவி, மொபைல்போன் கலாசாரம் அதிகரிப்பதற்கு முன்பாக, கோடை விடுமுறையில் குழந்தைகள் குழுவாக விளையாடி மகிழ்ந்தனர். இதனால், அவர்களின் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டது. உடல் வலிமை பெற்றது.இன்றைய காலத்தில், குழந்தைகள் வீட்டினுள்ளேயே முடங்கி விடுகின்றனர். இதனால், குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும். அவர்கள், மற்ற குழந்தைகளோடு இணைந்து விளையாடும் போது, ஒற்றுமை, குழு போட்டி திறன்கள் அதிகரிக்கும். இது, கல்வி கற்றலுக்கும் உதவும்.தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமுள்ளதால், குழந்தைகளை மாலை வேளையில் விளையாட வைக்க வேண்டும். மேலும், தங்கள் வீடுகளில் மாடி தோட்டம் அமைத்தல், செடிகள் வளர்த்தல் போன்றவைகளில் ஈடுபட செய்ய வேண்டும்,' என்றனர்.