உடுமலை: ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டத்தில் கோடை கால புலிகள் மற்றும் மாமிச, தாவர உண்ணிகள் கணக்கெடுப்பு பணி இன்று துவங்கி, வரும், ஜூன் 5ம் தேதி வரை நடக்கிறது.தேசிய புலிகள் கணக்கெடுப்பின், ஒரு பகுதியாக தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பு வழிகாட்டுதலின்படி, கோடைகால புலிகள் மற்றும் இதர மாமிச உண்ணிகள், தாவர உண்ணிகள் கணக்கெடுப்பு பணி, ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டத்தில் துவங்கியுள்ளது.கணக்கெடுப்பு பணி, உடுமலை, அமராவதி, கொழுமம் மற்றும் வந்தரவு வனச்சரகங்களில், 34 சுற்றுகளில், 53 நேர்கோட்டுப்பாதைகளில் நடக்கிறது.கோடை கால புலிகள் கணக்கெடுப்பு பணி குறித்த பயிற்சி முகாம், நேற்று மாவட்ட வன அலுவலகத்தில் நடந்து. ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவேந்திரகுமார் மீனா தலைமை வகித்தார்.உயிரியலாளர் மகேஷ்குமார், வனச்சரக அலுவலர்கள், உடுமலை சிவக்குமார், அமராவதி சுரேஷ், கொழுமம் செந்தில்குமார், வந்தரவு பிரபு மற்றும் வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.இதில், கோடை கால வன விலங்குகள் கணக்கெடுப்பு குறித்து பயிற்சியளிக்கப்பட்டதோடு, இப்பணிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டது.நேற்று பயிற்சியுடன் துவங்கிய கணக்கெடுப்பு பணியில், இன்று முதல், ஜூன், 1ம் தேதி வரை முதல், 3 நாட்கள் வனச்சரகங்களில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுகளில் காணப்படும் புலி, சிறுத்தை, பிற மாமிச உண்ணிகள் மற்றும் மிகப்பெரிய தாவர உண்ணிகளின் தடயங்கள் சேகரிக்கப்பட்டு, பதிவு செய்யப்படுகிறது.அடுத்த, 3 நாட்கள், (ஜூன் 2 முதல், 4 வரை ) நேர் கோட்டுப்பாதையில் நடந்து சென்று, நேரடியாக காணப்படும் இரை விலங்குகளையும், அதே பாதையில் திரும்பி வரும் போது, ஒவ்வொரு, 400 மீட்டர் இடைவெளியில் உள்ள பிளாட்களில் தாவரங்களின் வகைகளும் கணக்கெடுக்கப்படுகிறது.5ம் தேதி, கணக்கெடுக்கப்பட்ட வன உயிரினங்கள், தாவரங்கள் உள்ளிட்ட தரவுகளின் விபரங்கள் சமர்ப்பிக்கப்படுகிறது.