தொண்டாமுத்துார்: தொண்டாமுத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது.தொண்டாமுத்துார் ஊராட்சி ஒன்றியத்தில், பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி, மத்வராயபுரம், நரசீபுரம், வெள்ளிமலைபட்டிணம், தேவராயபுரம், தென்னமநல்லுார், ஜாகீர்நாயக்கன்பாளையம், இக்கரை போளுவாம்பட்டி ஆகிய, 10 ஊராட்சிகள் உள்ளன.ஒவ்வொரு ஊராட்சிகளிலும், சராசரியாக, 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை வசித்து வருகின்றனர். அந்தந்த ஊராட்சிகளில், துாய்மை பணியாளர்களை கொண்டு, வீடு வீடாக சென்றும், பேட்டரி வண்டிகள், மூன்று சக்கர தள்ளு வண்டிகள் மூலமாக, குப்பை சேகரிக்கப்படுகிறது.ஆனால், தொண்டாமுத்துார் ஊராட்சி ஒன்றியத்தில், ஒரு சில ஊராட்சிகளை தவிர மற்ற அனைத்து ஊராட்சிகளிலும், குப்பை மேலாண்மை முறையாக செய்வதில்லை என, புகார் எழுந்துள்ளது.சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில், வீடு, வீடாக குப்பை சேகரிக்கப்படுகிறது. ஆனால், அவ்வாறு, சேகரிக்கும் குப்பையை, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், மக்கும் குப்பை, மக்காத குப்பை என, தனித்தனியாக தரம் பிரித்து, மக்கும் குப்பையை, குப்பை குழியில் இட்டு, உரம் தயாரிக்க வேண்டும்.மக்காத குப்பையை மறுசுழற்சி மூலம் வருவாய் ஈட்ட வேண்டும். ஆனால், தொண்டாமுத்துார் வட்டாரத்தில் உள்ள பல ஊராட்சிகளில், குப்பையை தரம் பிரிக்காமல் ஒன்றாக கொட்டி, அதனை தீ வைத்து எரித்து வருகின்றனர்.இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அருகில் உள்ள குடியிருப்பில் உள்ளவர்களும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 'எந்த அதிகாரியும் கண்டுகொள்வதில்லை. இதனால், பல ஊராட்சிகளில் தற்போதும், திடக்கழிவு மேலாண்மை திட்டம் பெயரளவிலேயே உள்ளது' என்றனர்.