பொள்ளாச்சி;பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் கோடை மழை பெய்ததால், விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளன.பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர், நெகமம், கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், வெயிலின் தாக்கத்தால், நீர் நிலைகள் வறண்டு காணப்பட்டன. நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்றதால், பாசனத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.விவசாயிகள், நீண்ட கால பயிரான தென்னை மரங்களை காப்பாற்ற, விலைக்கு தண்ணீர் வாங்கி ஊற்றினர். ஆனால், தேங்காய் உற்பத்தி குறைந்து, பாதிப்பு ஏற்பட்டது.இந்நிலையில், கோடை மழை பரவலாகவும், எதிர்பார்ப்பை விட அதிகமாகவும் பெய்ததால், நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயராவிட்டாலும், வறட்சியால் காய்ந்திருந்த பகுதிகள் தப்பின.கோடை மழையை பயன்படுத்தி, மானாவாரி நிலத்தில் சோளம், கம்பு, தட்டைபயிறு, உளுந்து சாகுபடி செய்ய நிலத்தை உழுது, விதைப்பு செய்துள்ளனர். கோடை மழையை தொடர்ந்து, தென்மேற்கு பருவமழை சீசனும் துவங்கியுள்ளதால், விவசாயத்துக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.