| ADDED : ஜூன் 25, 2024 12:16 AM
கோவை;கோவை, டாடாபாத், டாக்டர் ராஜேந்திர பிரசாத் சாலையில் (நுாறடி ரோடு) செயல்பட்டு வந்த ஸ்ரீநிவாசப் பெருமாள் பைனான்ஸ் கார்ப்பரேஷன், சுந்தரம் பைனான்ஸ் குழுமம் ஆகிய நிதி நிறுவனங்கள், பல்வேறு முதலீட்டு திட்டங்களின் கீழ் பொதுமக்களிடம் பெற்ற பணத்தை திரும்ப வழங்காமல், நிதி நிறுவனங்களை மூடி விட்டன. முதலீட்டாளர்களிடம் இருந்து புகார்கள் வந்தன.அரசு மற்றும் கோர்ட் உத்தரவுகளின் அடிப்படையில், இவ்விரு நிதி நிறுவனங்களின் சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டன. அவற்றை விற்பனை செய்து, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்டம் - 1997ன்படி, முதலீட்டாளர்களுக்கு அவர்களது தொகை திரும்ப வழங்கப்படுகிறது.இந்நிறுவனங்களில் முதலீடு செய்து, இன்னும் பணத்தை திரும்ப பெறாமல் இருப்பவர்கள், தங்கள் கைவசமுள்ள சான்றுகளுடன், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தையோ அல்லது கலெக்டர் அலுவலக புதிய கட்டடத்தில் முதல் தளத்தில் உள்ள 'டான்பிட்' பிரிவையோ (அறை எண்: 22) அணுகலாம்.வரும் ஜூலை, 21ம் தேதிக்குள் அணுகி, முதலீட்டுத்தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இல்லையெனில், அத்தேதிக்கு பின், அரசு வசம் இருக்கும் இருப்புத்தொகை கோர்ட்டில் ஒப்படைக்கப்படும் என, மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.