உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை அருகே போதையால் விபரீதம்: தீ விபத்தில் மூவர் பலி; நான்கு பேர் காயம்

கோவை அருகே போதையால் விபரீதம்: தீ விபத்தில் மூவர் பலி; நான்கு பேர் காயம்

சூலூர்:கோவை அருகே நள்ளிரவில் போதையால் ஏற்பட்ட தீ விபத்தில், மூன்று பேர் பலியாகினர். நான்கு பேர் காயமடைந்தனர்.கோவை மாவட்டம், சூலூர் அடுத்த முத்துக்கவுண்டன் புதூரில் திருமூர்த்தி என்பவருக்கு சொந்தமான, வாடகை வீடுகள் உள்ளன. அங்கு, தேனி மாவட்டம் கடமலை குண்டு பகுதியை சேர்ந்த பாண்டியன் மகன் அழகர் ராஜா, 24, மணிகண்டன் மகன் தினேஷ், 24, லட்சுமி புரத்தை சேர்ந்த பரமன் மகன் வீரமணி, 21, மயிலாடும்பாறையை சேர்ந்த தங்கபாண்டி மகன் முத்துக்குமார், 24, ரவி மகன் பாண்டீஸ்வரன், 27, ஆகியோர் குடியிருந்தனர். இவர்கள் அனைவரும் பெட்ரோல் டேங்கர் லாரி டிரைவர்கள். இவர்களின் நண்பர்களான கட மலை குண்டை சேர்ந்த அய்யனார் மகன் சின்னகருப்பு, 22, செந்தில் மகன் மனோஜ், 24, ஆகியோர் கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். அவ்வப்போது அனைவரும் அறையில் சந்தித்து கொள்வது வழக்கம். நேற்று முன் தினம் இரவு ஏழு பேரும் அறைக்கு வந்துள்ளனர். ஐந்து பேர் மது அருந்தி விட்டு, ந்ளளிரவு 12:00 மணிக்கு சமைத்து கொண்டிருந்தனர். இதில், சின்னக்கருப்பு மற்றும் மனோஜ் ஆகியோர் மது அருந்தாமல், தூங்கி விட்டனர். அப்போது, அழகர் ராஜா, பெரிய கேனில் இருந்த பெட்ரோலை, மற்றொரு கேனில் ஊற்றியுள்ளார். அப்போது, பெட்ரோல் சிதறியதால், காஸ் ஸ்ட்வ்வில் பட்டு தீப்பற்றியது. ஏற்கனவே அங்கு, கேன்களில் பெட்ரோல், டீசல் வைக்கப்பட்டு இருந்ததால், தீ அறை முழுக்க பரவியது. இதில் ஏழு பேரும் சிக்கி கொண்டனர். கரும்புகை மற்றும் தீயால் மயங்கினர்.அருகில் இருந்தவர்கள் மீட்க முயற்சித்தினர். இதற்கிடையில், அழகர் ராஜா, சின்னக்கருப்பு, முத்துக்குமார் ஆகியோர் மூச்சு திணறி பலியாகினர். தகவல் அறிந்து சூலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், கருமத்தம்பட்டி டி.எஸ்.பி., தங்கராமன், இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்த மற்ற நான்கு பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவ இடத்தில் எஸ்.பி., பத்ரி நாராயணன், தாசில்தார் தனசேகர் ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். வழக்கில் சிக்கிய அழகர் ராஜா:நேற்று முன்தினம் காலை ராவத்தூரில் டேங்கர் லாரி மோதி, பெண் பலியானார். இந்த வழக்கு தொடர்பாக போலீஸ் ஸ்டேஷன் சென்று வந்த அழகர் ராஜா, இரவில் தீ விபத்தில் சிக்கி பலியாகி உள்ளார். தினேஷ் மற்றும் வீரமணி, 80 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாண்டீஸ்வரன் மற்றும் மனோஜ் ஆகியோர், 30 சதவீத தீக்காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெட்ரோல், டீசல் வந்தது எப்படி :ஒரு சிறிய அறைக்குள் பல லிட்டர் பெட்ரோல், டீசல் இருந்தது தான் தீ பரவவும் விபத்து ஏற்படவும் காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. அவை எப்படி அங்கு வந்தது,,என போலீசார் விசாரிக்கின்றனர். நல்ல வேளையாக அறையில் இருந்த சிலிண்டர் வெடிப்பதற்கு முன், தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டதால், மேலும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை