| ADDED : ஆக 02, 2024 05:16 AM
கோவை : கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில், மூன்று நாட்கள் நடக்கும் வர்த்தக கண்காட்சி நேற்று துவங்கியது. மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் ஒரு பகுதியான, இந்தியா என்டர்பிரைசஸ் டெவலப்மென்ட் சர்வீசஸ் இணை இயக்குனர் சுரேஷ் பாபுஜி, கண்காட்சி அரங்கை துவக்கி வைத்தார். உதவி இயக்குனர் ரெட்டி, 'மிடாஸ் டச்' நிறுவன மேலாளர் சஜீஸ் ஆகியோர் உடனிருந்தனர்.'ஏ' மற்றும் 'பி' அரங்கில் நடந்த கண்காட்சியில், பிளாஸ்டிக் தயாரிப்பு இயந்திரங்கள், மோல்டிங் தயாரிப்பு இயந்திரங்கள், ரசாயன தயாரிப்பு உபகரணங்கள், வேர் ஹவுஸ், லாஜிஸ்டிக்ஸ், பேக்கேஜ் ஆகியவற்றின் செயல்பாடுகளை விளக்கும் வகையில் என, மொத்தம் 170 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அரங்குகளை, சுரேஷ் பாபுஜி பார்வையிட்டு, அதன் தன்மை, எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது ஆகியவற்றை கேட்டறிந்தார். இதுகுறித்து இவர் கூறியதாவது:சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அசுர வளர்ச்சி பெறும். இதுபோன்ற கண்காட்சியை, தொழில் முனைவோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் குறித்து, அமைச்சகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.