உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகரமைப்பு குழுவுக்கே தெரியாமல் தீர்மானம் மன்றத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் கொதிப்பு

நகரமைப்பு குழுவுக்கே தெரியாமல் தீர்மானம் மன்றத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் கொதிப்பு

கோவை;கோவை மாநகராட்சியில், நகரமைப்புக்குழுவுக்கு தெரியாமல், லே-அவுட் அப்ரூவல் தீர்மானங்கள், மாமன்றத்துக்கு வந்ததால், தி.மு.க., கவுன்சிலர்கள் கொதிப்படைந்தனர்.கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம், துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமையில் நேற்று நடந்தது; மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார். அதில், 333 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றில் பல்வேறு தீர்மானங்கள் மீது கவுன்சிலர்கள் பலரும் ஆட்சேபம் தெரிவித்தனர். சிலர் விவாதம் செய்ய வேண்டுமென கூறினர்.இருப்பினும் விவாதமின்றி தீர்மானங்களை நிறைவேற்றி விட்டு, பேசிக்கொள்ளலாம் என துணை மேயர் தெரிவித்தார். இதைக்கேட்டு, தி.மு.க., கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தீர்மானம் நிறைவேற்றி விட்டு, விவாதம் செய்தோ அல்லது ஆட்சேபம் தெரிவித்து என்ன பயன் என கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். இருப்பினும் கூட, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குடிநீர் கட்டணம் உயர்வு

கோவை மாநகராட்சியோடு, 2011ல் இணைக்கப்பட்ட, விளாங்குறிச்சி, காளப்பட்டி, கவுண்டம்பாளையம், வீரகேரளம், வடவள்ளி, குறிச்சி, குனியமுத்துார், துடியலுார், சின்ன வேடம்பட்டி, சரவணம்பட்டி, வெள்ளக்கிணறு ஆகிய உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த பகுதிகளில் வசிப்போருக்கு, குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்ட தீர்மானம் நிறைவேறியது.வீட்டு இணைப்புக்கு மாதந்தோறும் ரூ.100, வீட்டு இணைப்பு (பல்க் கனெக்ஷன்) ரூ.900, வீட்டு உபயோகம் அல்லாத இணைப்பு ரூ.525, வீட்டு உபயோகம் அல்லாத இணைப்பு (பல்க் கனெக்ஷன்) ரூ.1,350 என குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.மா.கம்யூ., மாமன்ற குழு தலைவர் ராமமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்த போதிலும், இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

8 வார்டுகள் புறக்கணிப்பு

தி.மு.க., மாமன்ற குழு தலைவர் கார்த்திகேயன் பேசுகையில், ''கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட எட்டு வார்டுகள் புறக்கணிக்கப்படுகின்றன. ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு, குறைகளை சொல்வதற்கு சங்கடமாக இருக்கிறது. தெருவிளக்குகள் போதிய வெளிச்சம் இருப்பதில்லை; 20 வாட்ஸ்க்கு குறைவாக இருக்கிறது. பொறியியல் பிரிவினரிடம் கூறினாலும் தீர்வு காண்பதில்லை,'' என்றார்.

'மாஜி' மேயர் 'ஆப்சென்ட்'

கோவை மாநகராட்சியில் நேற்று நடந்த மாமன்ற கூட்டத்துக்கு, மொத்தமுள்ள, 100 கவுன்சிலர்களில், 97 பேர் வந்திருந்தனர். முன்னாள் மேயரான, 19வது வார்டு கவுன்சிலர் கல்பனா, 9வது வார்டு கவுன்சிலர் சரஸ்வதி, 91வது வார்டு கவுன்சிலர் ராஜேந்திரன் ஆகியோர் வரவில்லை. முன்னாள் மேயர் கல்பனாவுக்கு, கவுன்சிலர்கள் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி