உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வனபத்ரகாளியம்மன் ஆடிக்குண்டம் திருவிழா பூச்சாட்டுடன் துவங்கியது

வனபத்ரகாளியம்மன் ஆடிக்குண்டம் திருவிழா பூச்சாட்டுடன் துவங்கியது

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக் குண்டம் திருவிழா, பூச்சாட்டுடன் துவங்கியது. கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆகும். ஒவ்வொரு ஆண்டும், இக்கோவிலில் ஆடிக் குண்டம் விழா, வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு ஆடிக்குண்டம் விழா, நேற்று முன் தினம் இரவு பூச்சாட்டுடன் துவங்கியது. காலை, மதியம் அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. மாலை அம்மனுக்கு அர்ச்சகருக்கும் காப்பு கட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து இரவு 9:00 மணிக்கு மேல், நெல்லித்துறை கிராம மக்களை கோவில் நிர்வாகத்தின் சார்பில், முத்தமிழ் விநாயகர் கோவிலில் இருந்து கோவிலுக்கு அழைத்து வந்தனர். அதன்பிறகு அம்மனுக்கு பூச்சாட்டப்பட்டது. இவ்விழாவில், கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி மற்றும் நெல்லித்துறை கிராம மக்கள் கோவில் பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு தினமும், அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற உள்ளது. 30ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பும், அதை தொடர்ந்து காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்கும் திருவிழாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் மேனகா, உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்