| ADDED : ஆக 13, 2024 02:18 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சியில் அதிக பாரம் மற்றும் அனுமதி இல்லாமல் கனிமவளங்கள் எடுத்துச் சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என, கனிமவளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கல்குவாரிகள் செயல்படுகின்றன. இங்கு இருந்து அதிகளவு கேரள மாநிலத்துக்கு கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அதில், அதிக பாரம் மற்றும் முறையான அனுமதி இல்லாமல் கனிமவளங்கள் எடுத்துச் செல்வதாக தொடர் புகார்கள் எழுந்துள்ளன.இது குறித்து, கனிமவளத்துறை அதிகாரிகள், கடந்த சில வாரங்களுக்கு முன், பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் சின்னாம்பாளையம் அருகே ஆய்வு செய்தனர். அப்போது, முறையான அனுமதி பெறாமல் கனிமவளங்களை ஏற்றிச் சென்ற ஐந்து லாரிகளை பறிமுதல் செய்தனர்.பொள்ளாச்சி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் மற்றும் மகாலிங்கபுரம் போலீஸ்ஸ்டேஷனில் அந்த லாரிகளை நிறுத்தி வைத்தனர். இது குறித்து அதிகாரிகள் மகாலிங்கபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.இதுபோன்று, விதிமுறை மீறலில் ஈடுபடும் வாகனங்கள் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, கனிமவளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.