பொள்ளாச்சி;பொள்ளாச்சி தொகுதியில் அமைக்கப்பட்டு இருந்த, 'மாதிரி ஓட்டுச்சாவடி'களுக்கு வந்த வாக்காளர்கள், ஆர்வமாக ஓட்டளித்தனர்; அவர்களுக்கு பரிசாக மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில், இளைஞர்கள் ஓட்டுச்சாவடியாக, டி. நல்லிக்கவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மாற்றுத்திறனாளிகள் ஓட்டுச்சாவடி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மாதிரி ஓட்டுச்சாவடி சந்தேகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெண்கள் மட்டும் பணியாற்றும் ஓட்டுச்சாவடி மகாலிங்கபுரம் ஆரோக்கியமாதா மெட்ரிக் பள்ளி என, நான்கு மாதிரி ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.வால்பாறை தொகுதியில், பெண்கள் கையாளும் ஓட்டுச்சாவடி, வி.ஆர்.டி., பள்ளியிலும்; இளைஞர்களுக்கான ஓட்டுச்சாவடி, திவான்சாபுதுார் பள்ளியிலும்; மாதிரி ஓட்டுச்சாவடியாக பில்சின்னாம்பாளையம்; வால்பாறை அரசு கல்லுாரியில், மாதிரி மற்றும் மாற்றுத்திறனாளி ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன.நேற்று ஓட்டுப்பதிவின் போது, இளைஞர்களுக்கான ஓட்டுச்சாவடிக்கு வந்த முதல் வாக்காளர்களுக்கு ரோஜாப்பூ, லட்டு வழங்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி அதிகாரிகள் ஊக்கப்படுத்தினர். அதே போன்று பெண்கள் ஓட்டுச்சாவடி, இளைஞர்கள் ஓட்டுச்சாவடி முன், 'ஐ எம் எ ப்ரவுடு வோட்டர்' என எழுதப்பட்ட செல்பி 'பாயின்டுகள்' முன்பு நின்று 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். மாதிரி ஓட்டுச்சாவடிகள் முன், தென்னை ஓலையில் பந்தல் அமைத்து, வாழை தோரணம் கட்டப்பட்டது. மேலும், ரங்கோலி கோலமிட்டு வாக்காளர்களை வரவேற்றனர். நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஓட்டு போட வந்த அனைவருக்கும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா, ஓட்டுச்சாவடி மையங்களை ஆய்வு செய்து, மரக்கன்றுகளை வழங்கினார்.