| ADDED : ஜூலை 10, 2024 10:14 PM
வால்பாறை : வனத்துறையின் கட்டணக் கொள்ளையை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்போவதாக வணிகர் சம்மேளனம் அறிவித்துள்ளது.தமிழக வணிகர் சம்மேளனத்தின், வால்பாறை தொகுதி செயலாளர் சரவணன் கோவை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணியர்களிடம், ஆழியாறு சோதனைச்சாவடியில் 'பாஸ்ட் டேக்' முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான இடங்களில், சுற்றுலா பயணியர் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.மேலும், சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சி முனை, கவர்க்கல் வியூ பாயின்ட் உள்ளிட்ட, பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணியருக்கு தேவையான எவ்வித அடிப்படை வசதியும் வனத்துறை சார்பில் செய்துதரப்படவில்லை. ஆனால், கட்டணம் வசூலிப்பதில் மட்டும் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.வனத்துறை அதிகாரிகளின் இந்த கட்டணக் கொள்ளையை கண்டித்து, தமிழக வணிகர் சம்மேளனம் சார்பில், ஆழியாறு சோதனைச்சாவடியை முற்றுகையிட்டு விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.