உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யாரு சாமி நீங்கள்லாம்...! ஆபீஸ்களில் கோப்புகள் மாயம்... பணத்துக்காக கைங்கர்யம்

யாரு சாமி நீங்கள்லாம்...! ஆபீஸ்களில் கோப்புகள் மாயம்... பணத்துக்காக கைங்கர்யம்

-நமது நிருபர்-கோவையிலுள்ள பல்வேறு அரசு அலுவலகங்களிலும், பணத்துக்காக கோப்புகளை அலுவலர்கள் சிலர் மறைத்து வைப்பதும், பின்பு கொண்டு வருவதுமான வேலைகள் அதிகரித்து வருகின்றன.கோவையில் மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ள மாநகராட்சி, வருவாய்த்துறை, வீட்டு வசதி வாரியம் போன்ற அலுவலகங்களைத் தேடி, தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த அலுவலகங்களில் தான், பல ஆயிரம் மக்களின் விண்ணப்பங்கள் தேங்கிக் கிடக்கின்றன. அரசு மற்றும் பொதுமக்களின் சொத்துக்கள் குறித்த ஆவணங்களும், இந்த அலுவலகங்களில் தான் இருக்கின்றன.

காகித ஆவணங்கள்

உதாரணமாக, ஒரு 'லே அவுட்' வரைபடம், அதிலுள்ள பொது ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பான தானப்பத்திரங்கள், பட்டா, சிட்டா, அடங்கல், வாரியத்திடமிருந்து பொதுமக்கள் நிலம் மற்றும் வீடுகள் வாங்கி, பணம் கட்டியதற்கான ரசீதுகள், ஒப்பந்தங்கள் ஆகியவை, ஆவண வடிவங்களில் இந்த அலுவலகங்களில் தான் பாதுகாக்கப்பட்டுள்ளன.இவற்றில் பாதியளவுக்குக் கூட, மென்பொருள் வடிவங்களில் சேமிக்கப்படவில்லை; இணையதளங்களில் பதிவேற்றப்படவுமில்லை. அதிலும் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட லே அவுட்களின் வரைபடங்கள், நிலங்கள் சார்ந்த பதிவேடுகள், மனையிடம் மற்றும் வீடு ஒதுக்கீடுகள் சார்ந்த ஆவணங்கள் அனைத்தும் காகித வடிவில் தான் இருக்கின்றன.

அலைக்கழிப்பு

தங்கள் தேவையின் பொருட்டு, இந்த ஆவணங்களைக் கேட்டு, நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் தினமும் இந்த அலுவலகங்களைத் தேடி வருகின்றனர். ஆனால், முறைப்படி விண்ணப்பித்தாலும், நேரடியாக வந்து கேட்டாலும் இந்த ஆவணங்கள் உடனடியாகக் கிடைப்பதில்லை. தேடித்தருவதாகக் கூறி, மாதக்கணக்கில் விண்ணப்பதாரர்கள், ஒதுக்கீடுதாரர்கள் போன்றவர்களை, அலுவலர்கள் அலைக்கழிக்கின்றனர்.வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில், ஒதுக்கீடுதாரர்கள் தவணை, வாடகை மற்றும் வட்டி கட்டியதற்கான ஆதாரங்களைக் கொடுத்தாலும், அலுவலகத்தில் காகிதக் குப்பை மலையாக மாற்றி, அவற்றைப் புதைத்து விடுகின்றனர். லஞ்சம் கொடுத்தால் கோப்புகள் மீண்டும் கிடைக்கின்றன; இல்லாவிட்டால் காணவே இல்லை என்று மொத்தமாகக் கையைக் கழுவி விடுகின்றனர். குறைந்தபட்சம் சில அலுவலர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இப்படி பொதுச் சொத்து மற்றும் பொது மக்கள் சார்ந்த ஆவணங்களை மறைக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை