| ADDED : ஆக 04, 2024 05:37 AM
கோவை : கோவை மாநகராட்சிக்கான புதிய மேயர் யார் என்பதை, தி.மு.க., தலைமை இன்று (ஆக., 4) அறிவிக்க இருப்பதாக, கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.கோவை மாநகராட்சி மேயர் பதவியை, தி.மு.க.,வை சேர்ந்த, 19வது வார்டு கவுன்சிலர் கல்பனா ராஜினாமா செய்ததால், அதற்கான மறைமுகத் தேர்தல், 6ம் தேதி (செவ்வாய்க்கிழமை)காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. மேயர் பதவியை கைப்பற்ற, பெண் கவுன்சிலர்களிடையே பலத்த போட்டி இருக்கிறது. கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் மூலம் பலரும் காய் நகர்த்தி வருகின்றனர். சில கவுன்சிலர்களின் செயல்பாடுகள் குறித்து, உளவுத்துறை மூலமாக தலைமைக்கு அறிக்கை பெறப்பட்டுள்ளது.இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், 'தமிழக நகராட்சிகள் நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, நாளை(இன்று) கோவை வருகிறார். கோவை மற்றும் நெல்லை மாநகராட்சிக்கு புதிய மேயர் வேட்பாளர்கள் யார் என்பதை, இன்று தலைமை அறிவிக்க இருக்கிறது' என்றனர்.