உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இல்லம் தேடி கல்வித்திட்டம் நிறுத்தமா? கல்வி அதிகாரிகள் தகவல்

இல்லம் தேடி கல்வித்திட்டம் நிறுத்தமா? கல்வி அதிகாரிகள் தகவல்

கோவை : இல்லம் தேடி கல்வித் திட்டத்தை விரைவில் நிறுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக, தகவல் பரவியுள்ளது.கொரோனா ஊரடங்கு காலத்தில், பள்ளிகள் இயங்காமல் இருந்த நிலையில், பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டது. இதை சரி செய்ய, தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில், 'இல்லம் தேடிக் கல்வி' திட்டம் 2021ம் ஆண்டு அக்டோபரில் துவங்கப்பட்டது.இந்த திட்டத்தில் இரண்டு லட்சம் தன்னார்வலர்கள் மூலம், 34 லட்சம் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில், வீடு தேடி சென்று கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. முதலில் 12 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட இந்த திட்டம், ஒரே ஆண்டில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் மட்டும், 6765 மையங்கள் துவங்கப்பட்டன. கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு, 4542 மையங்கள் இருந்தன. இப்போது அந்த மையங்களின் எண்ணிக்கை, 972 மையங்களாக குறைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தமிழக அரசு நிறுத்த முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கொரோனா காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாத போது, மாணவர்களின் அடிப்படை கல்வி பாதிக்கப்பட்டது. அதனால் இந்த திட்டம் தேவைப்பட்டது. இப்போது பள்ளிகள் நடப்பதால், இனி அந்த திட்டம் தேவையில்லை என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றார்.

மலைப்பகுதிகளில் உண்டு

ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள மையங்களில், 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும், இந்த திட்டத்தை செயல்படுத்தச் சொல்லி உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் உள்ள மலைக்கிராமங்கள் மற்றும் பழங்குடி, பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மையங்கள் மட்டும் செயல்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ