-நமது நிருபர்-மின் கட்டண உயர்வால், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கொடுத்துள்ள உறுதி, தேர்தலுக்குப் பின் நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.தமிழகத்தில், குறிப்பாக, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கடந்த சில ஆண்டுகளாக, பலவிதமான நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இதனால் பெரும் நஷ்டத்துக்குள்ளாகி சிறு, குறு தொழில் முனைவோர் பலரும், தொழில் செய்ய முடியாமல் வேலைக்குச் சென்று விட்டனர். பலர் சிறு வியாபாரிகளாக மாறி வருகின்றனர்.இந்நிலையில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் வகையில், நிலைக்கட்டணமும், 'பீக் அவர்ஸ்' கட்டணமும் கடந்தாண்டில் பல மடங்கு உயர்த்தப்பட்டது. அத்துடன் ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இது, தொழில் துறையினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.அதிலும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டண உயர்வு, பல ஆயிரம் தொழில் முனைவோரை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. வெவ்வேறு அமைப்புகளும் தனித்தனியாகப் போராடியதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. அதனால் இணைந்து போராடுவதற்காக, தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. முதல்வருடன் சந்திப்பு
பல கட்டப் போராட்டங்களுக்குப் பின், 'பீக் அவர்ஸ்' கட்டண உயர்வு ரத்து உள்ளிட்ட சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் நிலைக்கட்டணத்தைத் திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கை உட்பட பல்வேறு முக்கியக் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. இதன் காரணமாக, தமிழகத்திலுள்ள அனைத்து லோக்சபா தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தப் போவதாகக் கூட்டமைப்பு அறிவித்தது.அதன்பின்பே, இந்த அமைப்பினரைச் சந்திப்பதற்கு, தமிழக முதல்வர் ஒப்புக் கொண்டார். சென்னை அறிவாலயத்தில், தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் பலரும், முதல்வரைச் சந்தித்தனர். தேர்தலுக்கு முன்பே தங்கள் கோரிக்கைகள் குறித்து, மின் வாரியத் தலைவர் உள்ளிட்ட பலரையும் சந்தித்தது, போராடியது பற்றி விளக்கினர். சந்தேகம்
மின் வாரியத்தில் முக்கியப் பொறுப்பிலுள்ள மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளே, தொழில்துறையைப் பாதிக்கும் உத்தரவுகளைப் பிறப்பிப்பதாக அப்போது குற்றம்சாட்டியுள்ளனர். தொழில்துறையினருக்கு முதல்வர் அலுவலகத்திலிருந்து அறிவுறுத்தல் சென்றும், அதை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். இவற்றைக் கேட்டுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின், 'தேர்தலுக்குப் பின் இந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்' என்று கூறியிருப்பதில், தொழில் முனைவோர் புதிய நம்பிக்கை அடைந்துள்ளனர். ஆனால் தேர்தலுக்குப் பின், இதை செயல்படுத்த மின் வாரிய அதிகாரிகள் முன் வருவார்களா என்பதே தொழில்துறையினரின் சந்தேகமாகவுள்ளது.முதல்வரே சொன்ன பின்னும் அதைச் செய்யாத அளவுக்கு, இந்த அதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுத்தது யார் என்ற கேள்வியைத்தான் பல்லாயிரக்கணக்கான தொழில் முனைவோரும் பரிதவிப்போடு கேட்கின்றனர். தேர்தலின்போது, முதல்வர் கொடுத்துள்ள உறுதி நிறைவேறுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.