வீடு கட்டித்தர வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை
வால்பாறை;வால்பாறை நகரை சுற்றிலும், 5 தேயிலை எஸ்டேட்கள் உள்ளன. இதில் பெரும்பாலான எஸ்டேட்கள் நகரில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, தேயிலை, மிளகு, காபி போன்றவை பயிரிட்டுள்ளனர்.இந்த நிலங்களை தமிழக அரசின் சார்பில் மீண்டும் 'ரீ சர்வே' செய்து, ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, அங்கு தொழிலாளர்களுக்கு அரசின் சார்பில் தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டும் என்பது, தொழிலாளர்களின், 50 ஆண்டுகால எதிர்பார்ப்பாக உள்ளது.தொழிலாளர்கள் கூறுகையில், 'வால்பாறை எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவற்றின் அச்சுறுத்தலால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடமுடியாமலும், நிரந்தரமாக அங்கு வசிக்க முடியாமலும் தவிக்கின்றனர்.வனவிலங்குகளுக்கு பயந்து, தொழிலாளர்கள் எஸ்டேட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், ஆக்கிரமிப்பு இடங்களை மீட்டு, அங்கு தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும்,' என்றனர்.