UPDATED : டிச 27, 2025 08:45 AM | ADDED : டிச 27, 2025 05:19 AM
அன்னூர்: பராமரிப்பு பணி மெத்தனமாக நடைபெறு வதால், அன்னூர் வட்டாரத்தில், 100 கிராமங்களுக்கு, 16 நாட்கள் ஆக குடிநீர் வழங்கப்படவில்லை. அவிநாசியில் இருந்து, அன்னூர் வழியாக, மேட்டுப்பாளையம் வரை, நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியின் போது, குடிநீர் குழாய்கள் சேதம் அடைந்துள்ளன. இவற்றை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து பொகலூர் ஊராட்சி முன்னாள் தலைவர் நடராஜன் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், 'குழாய் பராமரிப்புக்காக கடந்த மாதம் முன்னறிவிப்பு செய்யப்பட்டு பத்து நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. கடந்த 10ம் தேதிக்கு பிறகு பொகலூர், ஒட்டர்பாளையம், வடக்கலூர், குப்பனூர், காரே கவுண்டன்பாளையம், வடவள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த 100 கிராமங்களுக்கு குடிநீர் வரவில்லை எட்டு கி.மீ. தொலைவில் உள்ள அன்னூர் பேரூராட்சிக்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்து குடிநீர் எடுத்து வருகின்றனர். ஊராட்சி அலுவலகம், ஒன்றிய அலுவலகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. குழாய் பராமரிப்பு பணி மிக மெத்தனமாக, குறைந்த ஊழியர்களுடன் நடைபெறுகிறது. எனவே 29ம் தேதி பொகலூரில் சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளோம்,' என்றனர்.