| ADDED : பிப் 24, 2024 10:07 PM
கோவை;தெற்கு ரயில்வே நடத்திய பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகளில், 28 ஆயிரம் பள்ளி மாணவர்கள் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர்.பிரதமர் நரேந்திர மோடி, நாளை 554 அம்ரித் பாரத் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இதில் தெற்கு ரயில்வேயில், 44 அம்ரித் பாரத் ரயில்வே ஸ்டேஷன்கள் உள்ளன. இந்த மாபெரும் நிகழ்வு இந்தியா முழுவதும், 2,000 இடங்களில் நடக்கவுள்ளது.இதை கொண்டாடும் விதமாக, தெற்கு ரயில்வேயுடன் பல கல்வி நிறுவனங்கள் இணைந்துள்ளன. '2047 - வளர்ந்த இந்தியா மற்றும் வளர்ந்த ரயில்வே' என்ற தலைப்பில், மண்டலம் முழுவதும் 232 பள்ளிகளில் மாணவர்களிடையே கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. மொத்தம் 28 ஆயிரத்து 51 பள்ளி மாணவர்கள் பங்கேற்ற இந்த போட்டியில், 2082 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இந்தப் போட்டிகள், தெற்கு ரயில்வேயின் முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களான சென்னை கடற்கரை, சென்னை பூங்கா, அம்பத்துார், மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, ஈரோடு, உள்ளிட்ட 109 இடங்களில் நடைபெற்றன. இந்த தகவலை, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.