| ADDED : மார் 15, 2024 12:27 AM
கோவை:வெள்ளலுார் கிடங்கில் தேங்கியுள்ள பழைய குப்பையை 'பயோமைனிங்' முறையில் அழிக்க, கோவை மாநகராட்சி சார்பில் ரூ.54.84 கோடிக்கு சமர்ப்பித்த திட்ட அறிக்கைக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கோவையில் உள்ள, 100 வார்டுகளில், தினமும், 1,150 டன் குப்பை சேகரமாகிறது; இதில், 650 டன் மக்கும் குப்பை. நுண்ணுயிரி மூலம் செயலாக்கம் செய்து, இயற்கை எரிவாயு தயாரிக்க, ரூ.69.23 கோடிக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கி விட்டது. தினமும், 250 டன் குப்பை கையாள, 15 ஏக்கர் நிலம் வெள்ளலுார் கிடங்கில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.மீதமுள்ள, ஏழு லட்சத்து, 78 ஆயிரம் டன் பழைய குப்பையை 'பயோமைனிங்' முறையில் அழிக்க, மாநகராட்சி சார்பில் ரூ.54.84 கோடிக்கு சமர்ப்பித்த திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியிருக்கிறது. தொழில்நுட்ப அனுமதி பெறுவதற்கு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன், டெண்டர் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது.