உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மாநகராட்சியின் கீழ் வந்த 64 அரசு ஆரம்ப பள்ளிகள்

கோவை மாநகராட்சியின் கீழ் வந்த 64 அரசு ஆரம்ப பள்ளிகள்

கோவை:தொடக்க கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் இருந்த, 64 பள்ளிகள் தற்போது மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது, நிர்வாகம் மற்றும் மாணவர்கள் நலன் சார்ந்த சிக்கல்களுக்கு தீர்வாக அமைந்துள்ளது.கோவை மாநகராட்சி, 2011ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில், 41 ஆரம்பப் பள்ளிகள், 23 நடுநிலைப்பள்ளிகள் என, 64 பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளியின் ஆசிரியர்கள் நியமனம், பணியிட மாறுதல் உள்ளிட்ட நிர்வாக பணிகளை, தொடக்க கல்வி இயக்ககம் மேற்கொண்டு வந்தது.அதே சமயம், பள்ளி கட்டடங்கள் புனரமைப்பு, மேம்பாடு, பள்ளி காவலர், துாய்மை பணிகளுக்கு ஒப்பந்த பணியாளரை நியமித்து ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு, மாநகராட்சியில் இருந்து நிதி வழங்கப்படுகிறது. இப்பள்ளிகளில் முதலமைச்சர் காலை உணவு திட்டமும்,மாநகராட்சி நிதியில் செயல்படுத்தப்படுகிறது.பள்ளி கட்டடங்கள் மாநகராட்சி நிர்வாகத்திடமும், பள்ளி கல்வித்துறை அதிகாரத்தில்ஆசிரியர்களும்என, இருவேறு நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்தது.இதனால், பள்ளிகள் மேம்பாடு சார்ந்த விஷயங்களில் சிக்கல் நிலவியதுடன், வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக இருந்து வந்தது.இந்நிலையில், மாணவர்கள்நலன் கருதி இந்த, 64 பள்ளிகளும் தற்போது கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இது, பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வாக அமைந்துள்ளது.

வந்தது அரசாணை!

மாநகராட்சி கல்விக்குழு தலைவர் மாலதி கூறுகையில், ''மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 42 தொடக்க பள்ளிகள், 11 உயர்நிலை, 14 நடுநிலை, 17 மேல்நிலை என, 84 பள்ளிகள் உள்ளன. தற்போது, விரிவாக்கபகுதிகளில் இருக்கும், 64 பள்ளிகளையும் சேர்த்து, 148 ஆக எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உயர் அதிகாரிகள், அமைச்சர்களை சந்தித்து நீண்ட கால போராட்டத்துக்கு பிறகு இப்பள்ளிகளை இணைத்து, அரசாணை பெற்றுள்ளோம். இது மாணவர்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்,'' என்றார்.

நிபந்தனைகள்!

64 பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், மாநகராட்சி பணியில் சேர விரும்பினால், அவ்வாறே தொடரலாம். தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரிய விரும்பினால் தாய் ஒன்றியத்துக்கோ, பிற ஒன்றியங்களுக்கோ முன்னுரிமை அடிப்படையில் பணிக்கு திரும்பலாம் என்பன உள்ளிட்ட, நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை