கோவை;கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து, மருதமலை, பழனி, திருவண்ணாமலை மற்றும் வெளியூர்களுக்கு, நாளை முதல், 28ம் தேதி வரை, 70 சிறப்பு பஸ்கள் இயக்க இருப்பதாக, அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்திருக்கிறது.தைப்பூசத் திருவிழா நாளை (25ம் தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. நாளை மறுதினம் (26ம் தேதி) குடியரசு தின விழா, 27ம் தேதி (சனி), 28ம் தேதி (ஞாயிறு) என, தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது.அதனால், குடும்பத்தோடு பலரும் வெளியூர் செல்வர். இவர்களது வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.நாளை (25ம் தேதி) முதல் வரும், 28ம் தேதி வரை கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து மருதமலை, பழனி, திருவண்ணாமலை, திருச்செந்துார், மதுரை, தேனி, திருச்சி, சேலம், ஊட்டிக்கு செல்லவும், மீண்டும் ஊர் திரும்பவும் ஏற்கனவே இயக்கப்படும் வழித்தட பஸ்களுடன், கூடுதலாக, 70 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக, அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
நிறுத்தக் கூடாது!
பயணிகள் கூறியதாவது:தொடர் விடுமுறை மற்றும் விழாக்காலங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கும்போது, வழக்கமான வழித்தடங்களில் செல்லக்கூடிய சில பஸ்களை அரசு போக்குவரத்து கழகத்தினர் நிறுத்தி விடுகின்றனர். இதன் காரணமாக, அவ்வழித்தடத்தில் செல்ல வேண்டிய பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அவர்களுக்கு மாற்றுப்பேருந்து இயக்குவதில்லை.உதாரணமாக, அவிநாசி வழியாக திருப்பூர் செல்லக் கூடிய பஸ்கள் அடிக்கடி நிறுத்தப்படுவது வாடிக்கை. கருமத்தம்பட்டி, தெக்கலுார், அவிநாசி செல்லக்கூடிய பயணிகள், ஊருக்குச் செல்ல முடியாமல் பரிதவிப்புக்கு ஆளாகின்றனர். இதுபோன்ற தருணங்களில், ஈரோடு மற்றும் சேலம் செல்லும் பஸ்களில் ஏற்றிச் செல்ல, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.