உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பாக்கு ஷெட்டில் அதிகாரிகள் குழு திடீர் ஆய்வு: 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

 பாக்கு ஷெட்டில் அதிகாரிகள் குழு திடீர் ஆய்வு: 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூரில் உள்ள பாக்கு ஷெட்டில், பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் குறித்து ஆய்வு செய்தபோது, 5 குழந்தை தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டனர். தொண்டாமுத்தூர் சுற்றுப்பகுதியில், 60க்கும் மேற்பட்ட பாக்கு ஷெட்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பாக்கு ஷெட்களில், வடமாநில தொழிலாளர்கள், குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதில், வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதால், கல்வித்துறை சார்பில், தொண்டாமுத்தூர், குளத்துப்பாளையம், முத்திபாளையம், புத்தூர் ஆகிய அரசு துவக்கப்பள்ளிகளில், வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்தி, தனி ஆசிரியர்கள் நியமித்து பாடம் நடத்தி வருகின்றனர். ஆனால், பெரும்பாலான வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் தினசரி பள்ளிக்கு வருவதில்லை. இதுகுறித்து புகார் எழுந்ததையடுத்து, தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) சுபாஷ் சந்திரன் தலைமையில், தொழிலாளர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, குழந்தைகள் உதவி மையம், போலீசார் ஆகிய துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழுவினர், நேற்று தொண்டாமுத்தூரில் உள்ள பாக்கு ஷெட்டில், தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் பள்ளிக்கு வராமல் இருப்பதற்கான காரணம் குறித்து திடீர் ஆய்வு செய்தனர். பேபி என்பவருக்கு சொந்தமான பாக்கு ஷெட்டில் நடத்திய ஆய்வில், வடமாநிலத்தொழிலாளர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல், தங்களின் பெற்றோருடன், பாக்கு உறிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, 9 வயது முதல் 13 வயதிற்குட்பட்டவர்கள் வரை, 5 குழந்தை தொழிலாளர்களை மீட்டு, குழந்தைகள் காப்பகத்திற்கு அழைத்து சென்றனர். குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்திய பாக்கு ஷெட் உரிமையாளர் பேபி மீது தொழிலாளர் நலத்துறையினர், தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளித்தனர். தொடர்ந்து, இப்பகுதியில் உள்ள ஷெட்களில், ஆய்வு செய்து, அனைத்து குழந்தைகளையும் முறையாக பள்ளிக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை