உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தாமதமாக வந்த தணிக்கை கோப்புகள் : பல்கலை செனட் கூட்டம் ஒத்திவைப்பு

தாமதமாக வந்த தணிக்கை கோப்புகள் : பல்கலை செனட் கூட்டம் ஒத்திவைப்பு

கோவை:பாரதியார் பல்கலையில் செனட் கூட்டம், நேற்று காலை துவங்கிய சில நிமிடங்களில், ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பல்கலைகளில், சிண்டிகேட், செனட் ஆகிய இரு குழுக்கள், துணைவேந்தருக்கு இணையான அதிகாரம் கொண்டவை. நிர்வாக முடிவுகள் எதுவாயினும் ஒப்புதல் அளிப்பது மட்டுமின்றி, கேள்விகள் எழுப்பும் அதிகாரமும், இக்குழுக்களுக்கு உண்டு.செனட் குழுவில் அனைத்து கல்லுாரி முதல்வர்களும், ஆசிரியர் பிரதிநிதிகளும் இடம் பெற்று இருப்பார்கள்; இக்குழு ஆண்டுக்கு இருமுறை கூட வேண்டும் என்பது விதிமுறை. அதன் படி, செனட் உறுப்பினர்கள் கூட்டம் நேற்று பல்கலை அரங்கில் துவங்கியது. இதில், தணிக்கை தடை சார்ந்த கோப்புகள், உறுப்பினர்களுக்கு மிகவும் தாமதமாக அனுப்பிவைக்கப்பட்டதாக, சலசலப்பு ஏற்பட்டது.தணிக்கை தடை கோப்புகளை முழுமையாக படித்தால் மட்டுமே, ஆலோசனை மேற்கொள்ள முடியும் என்பதை வலியுறுத்தி, உறுப்பினர்கள் செனட் கூட்டத்தை ஒத்திவைக்க கூறினர். அதை தொடர்ந்து, பல்கலை பொறுப்பு குழு தரப்பில் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பல்கலை தரப்பில் இதுகுறித்து கேட்டதற்கு, ' தணிக்கை தடை சார்ந்த கோப்புகளை தொடர் விடுமுறை காரணமாக அச்சிட்டு, அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது. இ-மெயிலில் முன்பே அனுப்பி இருந்தோம். அதை தவிர்த்து, வேறு பிரச்னைகள் ஏதும் இல்லை' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ