| ADDED : பிப் 05, 2024 06:39 AM
மும்பை: ''சரத் பவார் தன் கடைசி தேர்தல் இது என கூறி மக்களின் உணர்வுகளை துாண்ட முயற்சிக்கலாம்,'' மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் பேசியதற்கு, சரத் பவார் ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.மஹாராஷ்டிரா துணை முதல்வரான அஜித் பவார், தேசியவாத காங்கிரசிலிருந்து எட்டு எம்.எல்.ஏ.,க்களை பிரித்துச் சென்று பா.ஜ., கூட்டணியில் இணைந்தவர். எஞ்சிய எம்.எல்.ஏ.,க்கள் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசில் உள்ளனர். இந்நிலையில் லோக்சபா தேர்தலுக்காக, தன் ஆதரவாளர்களுடன் அஜித் பவார் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது சரத் பவாரை கிண்டல் செய்து பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:
இத்தனை ஆண்டுகள் மூத்தவரான சரத் பவார் பேச்சைக் கேட்டீர்கள். இப்போது நான் சொல்வதைக் கேட்டு, நான் நிறுத்தும் லோக்சபா வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுங்கள். நீங்கள் சிக்கலில் இருந்தபோது, நான் செய்த உதவியை மறந்துவிடாதீர்கள். சிலர் எப்போது அரசியலை விட்டு ஒதுங்குவர் என தெரியவில்லை. மக்களின் உணர்வுகளை துாண்டுவதற்காக, 'இதுவே என் கடைசி தேர்தல்' என சொல்வர். யாருக்கு தெரியும்; அவருக்கு எது கடைசி தேர்தல் என்று. இவ்வாறு அவர் பேசினார்.அஜித் பவாரின் இந்த பேச்சுக்கு, சரத் பவார் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., ஜிதேந்திர ஆவத் கடும் கண்டம் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “அரசியலுக்காக சரத் பவாரைப் பற்றி அஜித் பவார் தவறாக பேசுகிறார். மஹாராஷ்டிரா மக்கள் இப்போது அவரை நன்கு புரிந்து இருப்பர். அவரது கருத்து மனிதாபிமானமற்றது. எல்லை மீறிவிடார்.” என்றார்.