உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி வந்து கலெக்டரிடம் மனு அளித்த முதியவர்

 ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி வந்து கலெக்டரிடம் மனு அளித்த முதியவர்

கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில், சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் வருமாறு: கோகோ பிரண்ட்ஸ் சகோதரி அறக்கட்டளை இயக்குனர் கல்கி சுப்ரமணியம்: திருநங்கைகள் வாழ்வாதாரத்துக்கும், முன்னேற்றத்துக்கும் தேங்காய் சிரட்டையில் பல பொருட்கள் செய்யும் பயிற்சி எடுத்த பின், கோகோ பிரண்ட்ஸ் திட்டத்தை துவக்கினோம். கிராமப்புறத்திலுள்ள ஏராளமான திருநங்கைகள், தொழில் திறன் பயிற்சி மூலம் நிலையான வாழ்வாதாரத்தை பெற்றனர். இனியும் ஏராளமான திருநங்கைகள் பலனடைய வேண்டும். அதற்காக எங்களுக்கு 5 சென்ட் இடம் வழங்க வேண்டுகிறோம். அந்த இடத்தில், கோகோ பிரண்ட்ஸ் திட்டத்தை செயல்படுத்துவதே எங்கள் நோக்கம்.

படுத்தபடி வந்து மனு

ஆர்.எஸ்.புரம், கண்ணுசாமி சாலையை சேர்ந்த ராமசுப்பிரமணியன்,83, உடல் நிலை சரியில்லாத சூழலில், ஸ்ட்ரெச்சரில் வந்து கொடுத்த மனு: கோவை- சத்தி சாலை கரட்டுமேடு காபிக்கடை பகுதியில், எனக்கு சொந்தமான இடத்தை சிலர் போலி ஆவணம் தயாரித்து அபகரிக்க முயன்றனர். அதை நான் கோர்ட் வாயிலாக முறியடித்தேன். ஆனால் தற்போது பட்டா மாறுதல் செய்து கொடுக்காமல், வடக்கு தாலுகா அதிகாரிகள் தொடர்ந்து இழுத்தடித்து வருகின்றனர். உடல் நிலை பாதிக்கப்பட்டு எழுந்து நடமாட முடியாத சூழலில் இருக்கிறேன். எனவே பட்டா மாறுதல் உத்தரவு வழங்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அபராதத்தை ரத்து செய்யணும்

நேதாஜி மக்கள் இயக்க தொழிற்சங்க ஆட்டோ டிரைவர்கள் கொடுத்த மனு: கடந்த 16ம் தேதி மதியம் 2.30 மணிக்கு, ஆட்டோ டிரைவர் அப்பாஸ் கோவை ரயில்வே ஸ்டேஷன் முன்பு பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார், ஆட்டோவுக்கான ஆவணங்கள் சரியாக இல்லை என்று கூறி, ஆன்லைன் மூலமாக ரூ. 3,000 அபராதம் விதித்தார். வாகனத்தின் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருப்பதால், அபராதத்தை ரத்து செய்ய வேண்டும்.

நுாலகத்தின் பெயர்

நாம் தமிழர் கட்சி நிர்வாகி பேரறிவாளன் அளித்த மனு: காந்திபுரத்தில் செம்மொழிப்பூங்கா அருகே நுாலகம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு, கோவை மண்ணின் மைந்தர்கள் சமூகத்துக்கு தொண்டாற்றியவர்களின் பெயரை வைக்க வேண்டும். இது தவிர மனைப்பட்டா, நிலஅளவீடு, ரேஷன்கார்டு பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் சமர்ப்பித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி