என்.டி.சி. தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க ஒப்புதல்
கோவை: தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவின் தொடர் வலியுறுத்தல் காரணமாக, தேசிய பஞ்சாலைக் கழக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க, மத்திய ஜவுளித்துறை செயலர் ஒப்புதல் அளித்துள்ளார். இதுதொடர்பாக, ஹெச்.எம்.எஸ். தொழிற்சங்க தலைவர் ராஜாமணி அறிக்கை: தமிழகத்தில் இயங்கி வந்த தேசிய பஞ்சாலைக் கழகத்துக்கு சொந்தமான 7 என்.டி.சி. மில்களில், கடந்த 8 மாதங்களாக, பாதி சம்பளம் கூட வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு, சம்பளத்தை விடுவிக்க வேண்டும் என, கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், திண்டுக்கல் தொகுதி மா.கம்யூ. எம்.பி. சச்சிதானந்தம் தலைமையில், ஹெச்.எம்.எஸ். தொழிற்சங்க தலைவர் ராஜாமணி, சி.ஐ.டி.யூ. பொதுச் செயலாளர் பத்மநாபன் ஆகியோர் மத்திய ஜவுளித்துறை செயலாளர் நீலம் ஷமி ராவை சந்தித்து முறையிட்டனர். தீபாவளிக்கு முன்னதாக சம்பளத்தை விடுவிக்க வலியுறுத்தப்பட்டது. இதன்படி, என்.டி.சி., மில்லில் பணிபுரிந்து வரும் அத்தியாவசிய தொழிலாளர்களுக்கு 50 சதவீதமும், இதர பணியாளர்கள், அதிகாரிகளுக்கு 25 சதவீதமும், மற்ற தொழிலாளர்களுக்கு 12.5 சதவீதமும் உடனடியாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.