மழையால் குளங்களில் உயர்ந் து வரும் நீர்மட்டம் தண்ணீர் தடையின்றி செல்வதில் தேவை கவனம்
கோவை, : குளங்களின் நீர் மட்டம் உயர்ந்துவரும் நிலையில் பெயரளவுக்கு என்று இல்லாமல், நீர் வழித்தடங்களில் தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல ஏதுவாக போர்க்கால அடிப்படையில் துார்வார வேண்டியது அவசியம்.கோவை மாநகராட்சி பகுதிகளில் நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, கோளராம்பதி, செல்வாம்பதி, குமாரசாமி, செல்வசிந்தாமணி, வாலாங்குளம், குறிச்சி குளம், உக்கடம் பெரியகுளம், சிங்காநல்லுார் குளம் உள்ளிட்டவை நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதுடன், விவசாய தேவைக்கும் முக்கிய பங்காற்றி வருகின்றன.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மாநகரில் கடந்த, 18ம் தேதி திடீரென மழை வெளுத்து வாங்க, தாழ்வான பகுதிகள், குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்தியது.தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், குளங்களுக்கு செல்லும் நீர் வழித்தடங்கள் துார்வாரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கு மண்டலம், ஜி.வி., ரெசிடென்சியில் இருந்து அவிநாசி ரோடு செல்லும் வழியில் உள்ள சங்கனுார் கால்வாய், வீரியம்பாளையம் கால்வாய் துார்வாரப்படுகிறது.நெசவாளர் காலனி ரயில்வே மேம்பாலம், சின்னவேடம்பட்டி ஏரி செல்லும் பிரதான கால்வாய் என மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் துார்வாரும் பணி நடந்துவருகிறது. அதேசமயம், அடிக்கடி பாதிப்புகளை ஏற்படுத்தும் பகுதிகளில் பணிகளை முழுமைப்படுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக, திருச்சி ரோட்டை கடந்து செல்லும் சிங்காநல்லுார் செல்லும் சங்கனுார் கிளை வாய்க்கால்களில் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பு ஏற்படுவதும், அப்பகுதி குடியிருப்புகளில் தண்ணீர் புகுவதும் தொடர்கதையாக உள்ளது.அடிக்கடி பாதிப்புகளை ஏற்படுத்தும் நீர் வழித்தடங்களில் தனி கவனம் செலுத்தி, மழை காலங்களில் போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், புறநகரங்களில் உள்ள குளங்களையும் துார்வார வேண்டியதும் அவசியம். 60 சதவீதம் 'ஓவர்'!
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில்,''மாநகராட்சி பகுதிகளில் உள்ள குளங்கள் தற்போது, 90 சதவீதம் நிரம்பும் தருவாயில் உள்ளன. இதையடுத்து, நீர் வழித்தடங்கள் துார்வாரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, 60 சதவீதம் துார்வாரப்பட்டுள்ளது. துார்வாரும் பணிகளை முழுமையாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக குளங்களை துார்வாரவும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.