| ADDED : ஜன 22, 2024 12:16 AM
உத்தரப்பிரதேசம், அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில், இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நாடு முழுவதும் ராம நாமம் ஓங்கியுள்ள நிலையில், 1964ம் ஆண்டு சிறுசேமிப்பு திட்டத்திற்கு ராமபிரான் மூலம் தபால்துறை விழிப்புணர்வு ஏற்படுத்திய சுவாரஸ்யத்தை, முன்னாள் தபால் அதிகாரி நினைவுகூர்ந்துள்ளார்.சிறுசேமிப்பு திட்டத்தை பிரபலப்படுத்தும் வகையில் தபால்துறை சார்பில் விளம்பர யுக்திகள் பின்பற்றப்பட்டது. அந்தவகையில், 1964ம் ஆண்டு, ராமாயணத்தில், ராமர் பாலம் அமைக்க உதவிய அணிலின் உதவியை மையப்படுத்தி விளம்பர பதாகைகள் வெளியிடப்பட்டது.இதுகுறித்து தேசிய விருது பெற்ற முன்னாள் தபால் அதிகாரி ஹரிகரன் கூறியதாவது:ராமாயணத்தில் இலங்கையிலிருக்கும் அன்னை சீதையை மீட்க, ராமர் கடலைக் கடந்து இலங்கையை அடைய முடிவுசெய்தார். கடலைக் கடக்க பாறைகளைக் கொண்டு பாலத்தை உருவாக்க, வானரங்கள், கரடிகள் மற்றும் பல விலங்குகள் உதவின. சிறிய அணில் ஒன்று தன் உடலை நனைத்து கடற்கரையில் படுத்து மணலை ஒட்டியும், சிறிய கூழாங்கற்கள், மண் உருண்டைகளைக் கொண்டும் பாலம் கட்ட உதவியது.பெரிய, பெரிய கற்கள், பாறைகளுக்கு இடையேயுள்ள இடைவெளியை நிரப்பி, பாலத்தை பலப்படுத்த இது பெரும் உதவியாக இருந்தது.அணில்களின் சிறிய உதவியை போல, சிறு சேமிப்பும் நமக்கு பேரூதவியாக இருக்கும் என்பதை வலியுறுத்தி, அணிலை ராமன் வருடிக்கொண்டிருப்பது போல 'அணிலும் மணல் சுமந்தது அகம் மகிழ்ந்தார் ராமபிரான்' என்ற தலைப்பில் தபால்துறை விளம்பர பதாகை தயாரித்திருந்தது.பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்ட இந்த விளம்பரம், நாடு முழுவதும் தபால்நிலையங்களில் வைக்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் இந்த விளம்பரத்திற்கு அப்போது நல்ல வரவேற்பும் இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.