உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பில்லுார் 3ம் குடிநீர் திட்டம் வரும் 11ல் துவக்கம் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அறிவிப்பு

பில்லுார் 3ம் குடிநீர் திட்டம் வரும் 11ல் துவக்கம் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அறிவிப்பு

கோவை:மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் கல்பனா தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், 109 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.துவக்கத்தில் பேசிய தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் கார்த்திகேயன்,''மக்கள் மீது நிதிச்சுமையை கூட்டக்கூடாது. ஏற்கனவே, குப்பை வரிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிவருகிறது. இச்சூழலில் தொழில் நிறுவனங்களுக்கான உரிம கட்டணம் உயர்வு தொடர்பான தீர்மானத்தை( பொருள்:102) நிறுத்தி வைக்க வேண்டும். தேர்தல் முடிந்தவுடன் ஆலோசிக்கலாம்,'' என்றார்.அ.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் பிரபாகரன், ''இத்தீர்மானத்தை தேர்தலுக்காக மட்டுமின்றி எப்போதுமே கொண்டுவர வேண்டாம். இதனால், பாதிக்கப்படுவது மக்கள்தான்,'' என்றார்.எதிர்ப்பு வலுத்ததால், தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது.

சிறுவாணி அணை விவகாரம்

சிறுவாணி அணையில், 26 அடிக்கு தண்ணீர் இருந்தும் கேரள அதிகாரிகள், 7 கோடி லிட்டர் வழங்கிவந்த இடத்தில் கடந்த ஒரு வாரமாக, 3 கோடி லிட்டரே வழங்கி வருவதாக, நமது நாளிதழில் பிப்., 3ம் தேதி செய்தி வெளியானது. மன்ற கூட்டத்தில் இது குறித்து பேசிய, 72வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் செல்வராஜ், ''தற்போது, 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருகிறது. சிறுவாணி அணையில் வால்வுகளை திறக்காத, கேரள அரசால் தண்ணீர் பிரச்னை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.உதயகுமார்(98) பேசுகையில், ''கேரள அரசின் கவனத்தை ஈர்க்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்,'' என்றார்.இதையடுத்து, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பேசுகையில்,''சிறுவாணி விவகாரம் குறித்து, தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் தண்ணீர் வந்துவிடும். பில்லுார்-3 கூட்டு குடிநீர் திட்டம் சோதனை ஓட்டமும் நடந்து வருகிறது. வரும், 11ம் தேதி இத்திட்டம் துவக்கிவைக்கப்பட உள்ளது,'' என்றார்.

என்ன சொல்கிறது தீர்மானம் 102?

தீர்மானம் 102ல், குறு நிறுவனங்களுக்கு ஓராண்டுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.2,500 மற்றும் அதிகபட்சம் ரூ.5,000, சிறு தொழில்களுக்கு ரூ.5,000 மற்றும் ரூ.7,500, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.8,000 மற்றும் ரூ.12 ஆயிரம், பெரிய நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.12 ஆயிரத்து, 500, அதிகபட்சம் ரூ. 40 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி