கோவை;கொடிசியா சார்பில், கட்டுமானம் சார்ந்த 'பில்டு இன்டெக்' கண்காட்சி, அவிநாசி ரோட்டில் உள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நேற்று துவங்கியது. வரும், 12ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியை, ஏ.வி.வி.,குழும நிறுவனங்களின் தலைவர் வரதராஜன், 'ரிப்பன்' வெட்டி துவக்கி வைத்தார்.காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை நடக்கும் இக்கண்காட்சியில் கட்டுமான பொருட்கள், பர்னிச்சர் சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 'பில்டு இன்டெக்' கண்காட்சி தலைவர் சிவக்குமார் கூறியதாவது:கண்காட்சியில், 259 ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன. கதவு, கேட் உள்ளிட்டவை தானியங்கும் விதமாக கட்டட ஆட்டோமேஷன், ரெடிமேடு கான்கிரீட் கட்டடங்கள், மேம்படுத்தப்பட்ட எம் மற்றும் பி சாண்ட், கட்டுமான இயந்திரங்கள், புத்தாக்க வடிவில் இடம்பெற்றுள்ளன.வீடு, தொழிற்சாலைகள் போன்ற கட்டடங்களை கட்டுவோர், ஒரே கூரையின்கீழ் அனைத்து தேவைகளையும், பூர்த்தி செய்து கொள்ளலாம். நான்கு நாள் கண்காட்சியை, 40 ஆயிரம் பேர் பார்வையிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவில் இன்ஜினியர்கள், கட்டுனர்கள் உள்ளிட்டோருக்கு, கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.கண்காட்சி துணை தலைவர் வள்ளல், 'கொடிசியா' தலைவர் திருஞானம், செயலாளர் சசிக்குமார் உள்ளிட்டோர் துவக்க விழாவில் பங்கேற்றனர்.