கோவை: விஸ்கோஸ் இழை மீதான தரக்கட்டுப்பாட்டு ஆணையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதற்கு ஜவுளித்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 2022ம் ஆண்டு முதல், விஸ்கோஸ் (வி.எஸ்.எப்.,) மற்றும் பாலியெஸ்டர் (பி.எஸ்.எப்.,) செயற்கை இழைகள் மீது, மத்திய அரசு தரக்கட்டுப்பாட்டு ஆணை (க்யூ.சி.ஓ.,) விதித்திருந்தது. இதன்படி, விஸ்கோஸ் மற்றும் பாலியெஸ்டர் இழைகளை இறக்குமதி செய்ய, அந்த வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற வேண்டும். எந்த வெளிநாட்டு நிறுவனமும் இதற்கு முன்வராது. எனவே, வெளிநாட்டில் இருந்து செயற்கை இழைகளை இறக்குமதி செய்ய முடியாமல் ஜவுளித் துறையினர் தவித்தனர். இந்த செயற்கை இழை மூலப்பொருள் இந்தியாவில், சர்வதேச விலையை விட கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை கூடுதலாக விற்பனை செய்யப்பட்டன. சில குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாக, இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக ஜவுளித் துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் பாலியெஸ்டர் மீதான தரக்கட்டுப்பாட்டு ஆணையை, மத்திய அரசு ரத்து செய்தது. சில நாட்களுக்கு முன், விஸ்கோஸ் செயற்கை இழை மூலப்பொருளுக்கான தரக்கட்டுப்பாட்டு ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், ஜவுளி தொழில்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, மறுசுழற்சி ஜவுளிக் கூட்டமைப்பு தலைவர் ஜெயபால் கூறியதாவது: இந்தியாவில், விஸ்கோஸ், பாலியெஸ்டர் ஆகியவற்றின் உள்நாட்டு விலை, சர்வதேச சந்தையை விட 12 முதல் 31 சதவீதம் வரை அதிகம். 2022ல் சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட கொள்கை முடிவுதான் இதற்குக் காரணம். இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. ஆனால், இந்த கட்டுப்பாடு காரணமாக, ஏராளமான சிறு நிறுவனங்கள், தறி நெசவாளர்கள் பாதிக்கப்பட்டு, தொழிலை விட்டு வெளியேறிவிட்டனர். அவர்களுக்கு ஏற்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை எப்படி ஈடுகட்டுவது. பெரிய நிறுவனங்கள் ஏற்றுமதி சலுகை, இறக்குமதி சலுகை, கடன் வட்டி சலுகை என ஏதாவது ஒரு வகையில் இந்த பாதிப்பை சமாளித்து விடும். ஆனால், சிறு, நடுத்தர நிறுவனங்களின் பாதிப்பு ஈடுசெய்ய முடியாதது. க்யூ.சி.ஓ., ரத்து செய்யப்பட்டதால், இந்தியாவில் செயற்கை இழை ஆடை உற்பத்தி வெகுவாக உயரும். சர்வதேச சந்தையில் நமது போட்டித் தன்மை அதிகரிக்கும். இந்திய மக்களுக்கு செயற்கை இழை ஆடை விலைகள் குறையும். இது ஜவுளித்துறைக்கு ஊக்கமளிக்கும் விஷயம். அதேசமயம், கொள்கை முடிவுகளை எடுக்கும்போது, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தொழில்துறையினரை உள்ளடக்கிய இடைக்கால குழு அமைத்து, அவர்களின் கருத்துகளையும் கேட்டு மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் இவ்வாறு, அவர் தெரிவித்தார்.