உள்ளூர் செய்திகள்

சிட்டி கிரைம்

கடனை திருப்பி கேட்க சென்றவர் மீது தாக்குதல்

சங்கனுார், காந்தி நகரை சேர்ந்தவர் அருண்குமார், 37. இவர் அதே பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவருக்கு கடன் கொடுத்திருந்தார். கடனை திரும்ப பெறுவதற்கு, சுதாகர் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் இல்லை. சுதாகரின் நண்பர்களான காளி, மணி, சங்கர் ஆகியோர் அங்கிருந்தனர். அவர்கள் அருண்குமாரை மது அருந்த அழைத்து சென்றனர். அப்போது ஏற்பட்ட தகராறில், மூவரும் சேர்ந்து அருண்குமாரை தாக்கினர். காயமடைந்த அவர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். துடியலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் பஸ் மோதி பலி

பீளமேடு பகுதியை சேர்ந்தவர் லதா, 48. இவர் தனது இரு சக்கர வாகனத்தில், சிங்காநல்லுார் நோக்கி சென்று கொண்டிருந்தார். காமராஜர் சாலை, வரதராஜபுரம் அருகில் சென்ற போது பின்னால் வந்த அரசு பஸ், லதா சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. கீழே விழுந்த லதாவின் மீது, பஸ்சின் சக்கரம் ஏறியது. லதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து தொடர்பாக, கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

வாலிபரை தாக்கிய எட்டு பேர் கைது

கெம்பட்டி காலனி, 7வது வீதியை சேர்ந்தவர் பிரவீன் குமார், 20. இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த சில வாலிபர்களுக்கும் இடையே, முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2ம் தேதி, பிரவீன் தனது வீட்டின் அருகில் இருந்தபோது, அங்கு வந்த வாலிபர்கள் அவரிடம் தகராறு செய்து சரமாரியாக தாக்கினர். பிரவீனின் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடி வர, வாலிபர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சம்பவம் குறித்து பிரவீன் குமார், பெரிய கடை வீதி போலீசில் புகார் அளித்தார். போலீசார் கெம்பட்டி காலனியை சேர்ந்த நவீன் குமார், சஞ்சய், லோகநாதன், விஷ்வேஸ்வரன், தனுஷ், ஹரி கார்த்திக், பிரசாந்த், சந்தோஷ் குமார் ஆகியோரை, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை