கோவை:இன்னும், 10 ஆண்டுகளில், கோவையும், திருப்பூரும் 'டுவின் சிட்டி'யாக மாறும் என, பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ள, வரைவு மாஸ்டர் பிளானில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வரும், 2041ம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கிட்டு, கோவையின் பொருளாதாரம், வர்த்தக வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, வரைவு முழுமை திட்டம் (மாஸ்டர் பிளான்) நகர ஊரமைப்பு துறையால் தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது; ஆட்சேபனை மற்றும் கருத்துகள் இருப்பின் தெரிவிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த 'மாஸ்டர் பிளான்' தொடர்பான விளக்க கூட்டம், இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில், அதன் அரங்கில் நேற்று நடந்தது. சேர்மன் ராமுலு தலைமை வகித்தார். நகர ஊரமைப்புத்துறை முன்னாள் இணை இயக்குனர் வாழவந்தான், தொழில் துறையினரின் சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்தார்.'மாஸ்டர் பிளான்' தயாரிப்பு பணியில் ஈடுபட்ட, கற்பகம் பல்கலை டீன் கதிரவன் கூறியதாவது:கடந்தாண்டுகளில் இருந்த மக்கள் தொகையை ஆய்வு செய்து, 2041ல், 45.75 லட்சம் மக்கள் வசிக்கலாம் என கணக்கிடப்பட்டிருக்கிறது. 9.17 லட்சம் பேருக்கு அன்றைய தினம் வேலைவாய்ப்பு தேவைப்படும். இன்னும், 10 ஆண்டுகளில் கோவையும், திருப்பூரும் 'டுவின் சிட்டி'யாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.நில வகைப்பாடு, போக்குவரத்து மற்றும் நீர் நிலை மேம்பாட்டு உள்ளிட்டவற்றை, அடிப்படையாகக் கொண்டு மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டுள்ளது.வாகன போக்குவரத்தை ஆய்வு செய்ததில், மேட்டுப்பாளையம் ரோடு மற்றும் எல் அண்டு டி பைபாஸில் அதிக வாகனங்கள் பயணிக்கின்றன. இரு வழிச்சாலையாக உள்ள எல் அண்டு டி பைபாஸை அகலப்படுத்தி, மேம்படுத்த வேண்டியது அவசியம்.வெள்ளலுார், நீலாம்பூர், வெள்ளமடையில் பஸ் ஸ்டாண்ட்டுகள் உருவாக்க பரிந்துரைத்துள்ளோம். வெள்ளலுாரில் இருந்து நகரப்பகுதிக்கு செல்லும் வழித்தடம்; வெள்ளலுாரில் இருந்து சிங்காநல்லுார் செல்லும் வழித்தடத்தை மேம்படுத்த வேண்டும்.கவுசிகா நதி, சங்கனுார் பள்ளம், நொய்யல் ஆறு மாசடைந்து காணப்படுகிறது; நீர் நிலைகளை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்.2002ல் கோவையில் இருந்து பசுமை பரப்பை, 2022ல் கணக்கிட்ட போது, 48 சதவீதம் குறைந்திருக்கிறது. அதனால், நகரப்பகுதியில் அரசுக்கு சொந்தமான காலியிடங்களில், நகர்ப்புற காடுகள் உருவாக்க பரிந்துரை செய்திருக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.இந்திய தொழில் வர்த்தக சபை செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
நிலம் கையகப்படுத்த வேண்டும்
தொழில்துறையினர் பேசியதாவது:தொழிற்சாலை பயன்பாட்டுக்கு ஒதுக்கிய நில வகைப்பாடு தற்போது நீக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் தொழிற்சாலை வகைப்பாடுக்கு மாற்ற வேண்டுமெனில், பல லட்ச ரூபாய் செலவழிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.தொழிற்சாலைகள் இருந்தால் தான் வேலைவாய்ப்பு உருவாகும்; வர்த்தகம் பெரும்; நகரம் வளர்ச்சி அடையும். இதற்கு முன் மாஸ்டர் பிளான் வெளியிட்ட போது, பொதுமக்கள் சொன்ன கருத்து மற்றும் ஆட்சேபனை இப்போது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.திட்டச்சாலைகள் அறிவிக்கும்போதே, அதற்குரிய நிலத்தை கையகப்படுத்த வேண்டும் அல்லது பத்திரப்பதிவு செய்யாமல் நிறுத்தி வைக்க வேண்டும்; வரைபட அனுமதி கொடுக்கக் கூடாது. இவ்வாறு செய்யாத காரணத்தால், நிலம் விற்கப்பட்டு, வீடுகள், கட்டடங்கள் உருவாகி விடுகின்றன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.