சூலூர் : சூலூர் ஆர்.வி.எஸ்., கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.கல்லூரி கலையரங்கில் நடந்த விழாவுக்கு, கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் செந்தில்கணேஷ் தலைமை வகித்தார். முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் முறையான கல்வி கிடைப்பதில்லை. கல்வி பயில வாய்ப்பு கிடைத்தவர்கள் பெற்றோரையும், கற்றுக்கொடுத்த ஆசிரியர்களையும் மறக்கக்கூடாது. உயர்கல்வியால் கற்றுக்கொண்டதை செயல்படுத்தி, சுயமாக வாழ்வில் உயரவேண்டும்.
கல்வி என்பது தகவல் பரிமாற்றத்துக்காகவோ, தேர்வுக்காகவோ, மார்க் பெறுவதற்காகவோ அல்ல. கற்ற கல்வியினை சிக்கலான சூழ்நிலையை எதிர்கொள்ளவும், புது கண்டுபிடிப்புகளுக்கும் பயன்படுத்த வேண்டும்.படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்கள் சமுதாயத்தில், பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும்; அதை சமாளிக்கும் மனநிலையை வளர்த்துக்கொள்ள தயாராக இருக்கவேண்டும். தோல்விகளை, வெற்றிக்கான படிக்கற்களாக மாற்றிக்கொள்ளவேண்டும். கற்ற கல்வியை கொண்டு நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சி மேம்பட பாடுபட வேண்டும். நமக்கு உண்மையாகவும், சமுதாயத்துக்கு நேர்மையாகவும் நடந்து கொண்டால், நாடு வளர்ச்சிப்பாதையை நோக்கி செல்லும்.இவ்வாறு, சுவாமிநாதன் பேசினார்.பட்டமளிப்பு விழாவில், 13 துறைகளை சேர்ந்த 645 மாணவ, மாணவியருக்கு பட்டசான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்லூரி ஆலோசகர் முபாரக், பேராசிரியர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.