| ADDED : ஜூலை 25, 2011 02:01 AM
பொள்ளாச்சி : கோவை மாவட்ட அளவில் முத்திரை பதித்த சேரிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு பரிசு வழங்கப்பட்டது.பொள்ளாச்சி அடுத்த சேரிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்குவிப்பு பரிசளிப்பு விழா, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, பள்ளிக்கு தளவாட பொருட்கள் வழங்கிய எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு பாராட்டு விழா என, முப்பெரும் விழா நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் லோகநாயகி வரவேற்றார். பொள்ளாச்சி எம்.எல்.ஏ., முத்துக்கருப்பணசாமி தலைமை வகித்தார். பொள்ளாச்சி எம்.பி., சுகுமார், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன் ஆகியோர் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி போதித்த ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கினர். பாடவாரியாக முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நடராஜன் பேசினார்.