உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மதுக்கடை ஊழியர்கள் கொதிப்பு அதிரடியா? கெடுபிடியா? போலீசை கண்டித்து "பார்கள் மூடல்!

மதுக்கடை ஊழியர்கள் கொதிப்பு அதிரடியா? கெடுபிடியா? போலீசை கண்டித்து "பார்கள் மூடல்!

கோவை : மதுக்கடை ஊழியர்களின் மீதான திடீர் கெடுபிடியைக் கண்டித்து மதுக்கடைகளில், ஒரு மணி நேரம் சரக்கு விற்பனை நிறுத்தப்பட்டது; கோவையிலுள்ள 202 'பார்'கள் இன்று மூடப்படவுள்ளன. கோவை மாவட்டத்தில், 302 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இவற்றில், 252 மதுக்கடைகளில் மது அருந்தும் கூடங்கள் (பார்) இயங்கி வருகின்றன. இந்த மதுக்கடைகளிலும்,'பார்'களிலும் இரவு 10.00 மணிக்கு மேல் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக ஏராளமான புகார்கள் குவிந்தன. இதன் எதிரொலியாக, மாநகர காவல்துறையினர் அதிரடி'ரெய்டு'களை நடத்தினர். அப்போது, மதுக்கடைகளுக்குள் இருந்தவர்களை போலீசார் கட்டாயமாக அப்புறப்படுத்தினர். மதுக்கடைகளை ஒட்டியுள்ள 'பார்'களில் தங்கியிருந்த 4 பேரைக் கைது செய்தனர். நேற்று முன் தினம் இரவு 10.00 மணிக்கு மேல், உக்கடம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்த 22 'பார்'களில் போலீசார் திடீர் சோதனை நடத்தி, அங்கிருந்தவர்களை எச்சரித்து வெளியேற்றினர். இந்த நடவடிக்கை, மதுக்கடை ஊழியர்களிடமும், 'பார்' நடத்துவோரிடமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. போலீசாரின் நடவடிக்கையைக் கண்டித்து, உக்கடம் பகுதியிலுள்ள 10 மதுக்கடைகளின் ஊழியர்கள், நேற்று காலையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10.00 மணிக்கு கடையைத் திறந்து வைத்து விட்டு, மது விற்பனையை நிறுத்தி விட்டனர். அதேநேரத்தில், 'பார்' உரிமையாளர்கள் பலரும் உக்கடம் பகுதியில் நேற்று காலையில் திரண்டனர். உக்கடம் பகுதியிலுள்ள 1689 என்ற எண்ணுடைய மதுக்கடை 'பார்'க்குள், காலி பாட்டில்களை எடுக்க காலை 9.45மணிக்கு உள்ளே சென்ற ஊழியர்களை போலீசார் துரத்தியடித்து விட்டு, தின் பண்டங்களை சிதறியடித்ததாக பரவிய தகவலே அவர்களை ஒன்று திரட்டியது. போலீசாரின் நடவடிக்கைக்கு எதிராக, என்ன செய்வதென்பது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். மதுக்கடை ஊழியர்கள் மற்றும் 'பார்' நடத்துவோர் சேர்ந்து துவங்கிய இந்த போராட்டம், நகருக்குள் பரவுவதற்குள், டாஸ்மாக் அதிகாரிகள் தலையிட்டு, உக்கடம் பகுதி மதுக்கடைகளில் விற்பனையைத் துவக்க உத்தரவிட்டனர்; காலை 11.00 மணிக்கு மேல் விற்பனை துவங்கியது.இதனால், 'பார்' உரிமையாளர்கள் 50க்கும் மேற்பட்டோர், கவுண்டம்பாளையம் டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். முதுநிலை மண்டல மேலாளர் மகேஷ்வரன், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சுப்பிரமணி ஆகியோரைச் சந்தித்து, போலீஸ் கெடுபிடி பற்றி தங்களது புகார்களை அடுக்கினர். அதற்கு, ''டாஸ்மாக் நிர்வாக இயக்குனரிடம் பேசி, இதற்கு தீர்வு காணப்படும்,'' என்று முதுநிலை மண்டல மேலாளர் உறுதியளித்தார். அதன்பின், கலெக்டர் அலுவலகத்திலும் அவர்கள் மனு கொடுத்தனர். போலீஸ் கெடுபிடியைக் கண்டித்து, நாளை (இன்று) சங்கத்திலுள்ள 202 'பார்'கள் மூடப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். டாஸ்மாக் மதுக்கூட தின் பண்டங்கள் விற்பனையாளர் நலச்சங்கத்தின் பொருளாளர் ஷாஜி கூறுகையில், ''காலை 8.00 மணிக்குக் கடையைத் திறந்தால்தான், 10.00 மணிக்குள் தின் பண்டங்களைத் (ஸ்நாக்ஸ்) தயார் செய்ய முடியும். ஆனால், காலை 9.45க்கு உள்ளே போன ஊழியர்களையே போலீசார் பிடித்துக் கொண்டு போனால் என்னதான் செய்வது,'' என்றார். மேலும் அவர் கூறுகையில், ''தமிழகத்திலேயே கோவை மாவட்டத்தில்தான் 'பார்' நிர்ணயக் கட்டணம் அதிகம். அதற்கு மேல், ஒவ்வொரு கடைக்கும் 30 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்ச ரூபாய் வரை வாடகை மட்டும் கொடுக்கிறோம். ''இவ்வளவு செலவழித்து, அந்த இடத்தில் ஊழியர்கள் தங்கவும் கூடாது என்றால் யாரும் இங்கே 'பார்' நடத்தவே முடியாது,'' என்றார். மதுக்கடை ஊழியர்கள் கூறுகையில், 'இரவு 10.00 மணிக்கு, மதுக்கடையை மூடிய பின் ஒரு மணி நேரத்துக்குக் கணக்குப் பார்க்க நேரம் வேண்டும். மறுநாள் காலை 8.00 மணிக்குள் கணக்கு ஒப்படைக்க வேண்டுமென்று டாஸ்மாக் நிர்வாகம் கூறுகிறது. ஆனால், 10.00 மணிக்கு மேல் கடையிலேயே இருக்கக்கூடாது என்றால் எப்படி கணக்குப் பார்ப்பது?,' என்றனர். இரவு 10.00 மணிக்கு மேல், மதுக்கடை மற்றும் 'பார்'களில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கலாம்; அதைக் கண்காணிப்பதை விட்டு விட்டு, கடைக்குள்ளேயே இருக்கக் கூடாது என்று கெடுபிடி செய்வது ஏன் என்பதே இவர்களின் கேள்வி. இதிலுள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டு போலீசார் செயல்படுவார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஒரு கடைக்கு விலக்கு :இரவு 10.00 மணிக்கு மேல், சரக்கு விற்பனையைத் தடுக்க அதிரடி செய்யும் போலீசார்க்கு, ரயில்வே ஸ்டேஷன் எதிரில் பிரபல 'மெஸ்' ஒன்றில் ஒரே ஒரு 'பார்' லைசென்சை வைத்துக் கொண்டு, விடிய விடிய அங்குள்ள ஓட்டலிலும் சரக்கு விற்பது மட்டும் தெரியவில்லையா என்று கேட்கின்றனர் 'பார்' உரிமையாளர்கள். இதற்கு போலீசார்தான் பதில் சொல்ல வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை