UPDATED : ஆக 24, 2011 05:59 PM | ADDED : ஆக 22, 2011 10:54 PM
கோவை : சரக்கு விற்பனையை உயர்த்த வலியுறுத்தி, கூடுதலாக குடிகாரர்களை உருவாக்க டாஸ்மாக் நிர்வாகம் நிர்ப்பந்திப்பதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின், கோவை மாவட்டப் பேரவைக் கூட்டம், தாமஸ் கிளப் கட்டடத்தில் நடந்தது. சங்கத்தின் மாவட்டத்தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர் பாலசுப்பிரமணியன், டாஸ்மாக் பணியாளர் சங்க மாநிலத்தலைவர் பாலுசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்: டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியத்தை அரசு அறிவிக்க வேண்டும்; வாரவிடுமுறை, மே தினம் மற்றும் விழாக்கால விடுமுறை அளிக்க வேண்டும். பணி விதிகள், பணி மாறுதல் விதிகளை வகுக்க வேண்டும். பணி நேரத்தை சட்டப்படி 8 மணி நேரமாக்கி, கூடுதல் நேரம் வேலை பார்ப்பதற்கு மிகை நேரப்படி வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. மதுபானங்களின் விற்பனையைக் கூட்டுவதற்காக இலக்கு நிர்ணயிப்பதால், கூடுதல் குடிகாரர்களை உருவாக்க டாஸ்மாக் நிர்வாகம் நிர்ப்பந்திக்கிறது; இதைக் கை விட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். செயல் அறிக்கையை மாவட்டச் செயலாளர் பாலமுருகன் வாசித்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் வி.சுப்பிரமணியன், முன்னாள் மாநில துணைத்லைவர் ஏ.சுப்பிரமணியன் உட்பட பலர் பேசினர். வரதராஜன் வரவேற்றார்; மாவட்டப் பொருளா ளர் ரங்கசாமி நன்றி கூறினார்.