-நமது நிருபர்-தமிழகத்தின் இரண்டாவது பெரிய லோக்சபா தொகுதியாக கோவை மாறியிருப்பது, இந்த நகரின் அபரிமிதமான வளர்ச்சியையும், இதற்கு இன்னும் நிறைய திட்டங்கள் தேவை என்பதையும் உறுதி செய்துள்ளது.லோக்சபா தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், தமிழகத்திலுள்ள தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 20 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களுடன், நான்கு லோக்சபா தொகுதிகள், பெரிய தொகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.இந்தப் பட்டியலில், 23 லட்சத்து 58 ஆயிரத்து 526 வாக்காளர்களுடன், ஸ்ரீபெரும்புதுார் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்து 20 லட்சத்து 83 ஆயிரத்து 34 வாக்காளர்களுடன், கோவை இரண்டாவது இடத்தில் உள்ளது. கோவை லோக்சபா தொகுதியிலுள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் தவிர, மற்ற தொகுதிகள் அனைத்தும் கோவை மாவட்டத்திலேயே உள்ளன. அதிலும் நான்கு தொகுதிகள், கோவை மாநகராட்சிப் பகுதிக்குள் அமைந்துள்ளன. இந்த நான்கில், தமிழகத்தின் இரண்டாவது பெரிய சட்டமன்றத் தொகுதியான கவுண்டம்பாளையமும் ஒன்றாகும். இருபது லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களுடன் உள்ள நான்கு தொகுதிகளில் மூன்று, சென்னை மற்றும் அதையொட்டியுள்ள தொகுதிகளாகும். அவற்றைத் தவிர்த்து, கோவை மட்டுமே, கடந்த 10 ஆண்டுகளில் இவ்வளவு அதிகமான வாக்காளர்களுடன் பெரிய நகரமாக வளர்ந்துள்ளது. தொழிற்சாலைகளால் பெரியது
ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில், 23 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் இருப்பதற்குக் காரணம், அந்தத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், ஏராளமான தொழிற்சாலைகள் அமைந்திருப்பது தான்.அதேபோல, கோவையும் தொழில் வளர்ச்சி பெற்றிருப்பதால்தான், மக்கள் தொகை பல மடங்கு அதிகமாகி, அதன் தொடர்ச்சியாக, வாக்காளர் எண்ணிக்கையும் 21 லட்சத்தை நெருங்கியுள்ளது.ஏற்கனவே, தொழில் வளர்ச்சி காரணமாக, தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள கோவை, இப்போது மாநிலத்தின் இரண்டாவது பெரிய தொகுதி என்ற வகையிலும் கூடுதல் கவனம் பெறுகிறது. இனியாவது கவனிக்கணும்
கடந்த பத்தாண்டுகளில், கோவையின் வளர்ச்சியை இது உறுதி செய்துள்ளது. இனியாவது, கோவைக்கு முக்கியத்துவம் அளித்து, மத்திய, மாநில அரசுகள் கூடுதல் நிதி, திட்டங்களைத் தருவதும் அவசியமாகியுள்ளது.வரும் தேர்தலில், மத்தியில் ஆளும்கட்சியின் வேட்பாளர், இங்கு வெற்றி பெற்றால், கோவை எம்.பி.,க்கு நிச்சயமாக அமைச்சரவையில் இடம் கிடைக்கவும், அதன் தொடர்ச்சியாக கோவைக்கு பல திட்டங்கள் வரவும் வாய்ப்பு அதிகமுள்ளது. அதே நேரத்தில், எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால், கோவை மேலும் ஐந்தாண்டுகளுக்கு புறக்கணிக்கப்பட்டு, வளர்ச்சியில் தேக்கமடையுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.ஏனெனில், கோவை தொகுதியில், 1999 தேர்தலுக்குப் பின், எதிர்க்கட்சி எம்.பி.,க்களே தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர். இம்முறையாவது ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கும் ஒருவர் கிடைத்தால்தான், வளர்ச்சித்திட்டங்கள் சாத்தியமாகும்.அத்தகைய வேட்பாளரை தேர்வு செய்வதில் தான், கோவையின் அடுத்த ஐந்தாண்டு வளர்ச்சி அடங்கியுள்ளது.
காகிதத்தில் திட்டங்கள்
விமான நிலைய விரிவாக்கம், ரயில்வே ஸ்டேஷன் மறு சீரமைப்பு, கிழக்கு பை பாஸ், 'எல் அண்ட் டி' பை பாஸ் விரிவாக்கம், கோவை-கரூர் பசுமை வழி, கோவை-சத்தி ரோடு புதிய பை பாஸ் என பல திட்டங்கள், பல ஆண்டுகளாக காகிதத்திலேயே உள்ளன. இவை அனைத்தும் செயல்படுத்தப்படுவதற்கு, ஆளுமைத்திறனும், ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கும் எம்.பி.,யும், கோவைக்குக் கிடைக்க வேண்டும்.