| ADDED : டிச 30, 2025 05:02 AM
ப ஸ் என்றால் டிரைவரும், கண்டக்டரும் இணைந்து இயக்கும் வாகனம் என்பதே பொதுவான எண்ணம். ஆனால் இதற்கு மாறாக, ஒரே மனிதர் பஸ்ஸை உருவாக்கி, ஓட்டி, பயணிகளிடமிருந்து கட்டணமும் வசூலித்து, ஊர் விட்டு ஊர் பயணித்த காட்சி, இந்தியாவில் எங்காவது நடந்திருக்குமா என்றால், அதற்கான விடை கோயம்புத்தூரில்தான் கிடைக்கிறது. சுமார் 80 ஆண்டுகளுக்கு முன், கோவை மக்கள் அந்த அபூர்வக் காட்சியை நேரில் பார்த்துள்ளனர். கோவையில் ஆரம்பகால பஸ் சேவை, எளிய வடிவில் தான் தொடங்கியது. அந்த பஸ்களில் சுற்றுத் தடுப்பு தகடுகள் இல்லை; கம்பிகள் மட்டுமே பாதுகாப்பாக இருந்தன. உட்காருவதற்கு பலகை இருக்கைகள். இவ்வாறு முதல் முதலாக பஸ் சேவை 1921ம் ஆண்டு கோயம்புத்தூரிலிருந்து உடுமலை வரை இயக்கப்பட்டது. அந்த பஸ்ஸை ஓட்டி வரலாறு படைத்தவர் சூலூரை அடுத்த கலங்கல் கிராமத்தைச் சேர்ந்த கோ.துரைசாமி. பின்னாளில் அவர் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு எனப் புகழ்பெற்றார். அவர் தொடங்கிய முயற்சியின் வெற்றியைத் தொடர்ந்து, பல தனியார் நிறுவனங்கள் பஸ் சேவையில் ஈடுபட முன்வந்தன. அவை அனைத்தையும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வந்து, ஏறத்தாழ 300 பஸ்களை ஒருங்கிணைந்து இயக்கும் முறையை உருவாக்கியதும் குறிப்பிடத்தக்கது. அந்த நிறுவனங்களில், நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே கொலக்கொம்பையில் வசித்த மேலுார் பிரசிடெண்ட் கே. சின்னசாமி நடத்தி வந்த, 'லட்சுமி டிரான்ஸ்போர்ட்' நிறுவனமும் ஒன்றாகும். 1935ம் ஆண்டில் இந்த பஸ் சேவைகளுக்காக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த தளமே, இன்றைய கோயம்புத்தூர் நகரில் அண்ணா சிலை அருகே செயல்பட்டு வரும் யு.எம்.எஸ். (United Motor Service) நிறுவனம். கோவையின் போக்குவரத்து வரலாற்றில் முக்கியமான ஒரு மைல்கல்லாக, இந்த நிறுவனம் இன்று வரை நினைவுகூரப்படுகிறது.