சோமனூர் : நூல் ரகங்களின் விலை குறைந்து வருவதாலும், துணி ரகங்களுக்கு உரிய விலை கிடைக்காமல் தேங்கி வருவதாலும், விசைத்தறி ஜவுளித்துறையினர் விரக்தியடைந்துள்ளனர்.கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 2.5 லட்சம் விசைத்தறிகள் இயங்குகின்றன. மேலும், 1000 க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய ஸ்பின்னிங் மில்கள் இயங்குகின்றன. இத்தொழில்களை நம்பியே, பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, விசைத்தறி ஜவுளித்தொழில் வீழ்ச்சியை சந்தித்து வருவது தொடர்கதையாகி உள்ளது. நிலையில்லாத பஞ்சு விலை மற்றும் நூல் விலையால் ஸ்பின்னிங் மில்களை முறையாக இயக்க முடியாமல் உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர். உற்பத்தியையும் குறைத்து விட்டனர். அதேபோல், கூலி உயர்வு கிடைக்காமை, மின் கட்டண உயர்வு, பாவு நூல் சப்ளை இல்லாமை உள்ளிட்ட பல காரணங்களால், 50 சதவீத விசைத்தறிகள் இயங்காமல் முடங்கியுள்ளன. தொடர்ந்து இறங்குமுகம்
கருமத்தம்பட்டி, சோமனூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள மில்களில் உற்பத்தி செய்யப்படும் நூல் ரகங்கள், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப, வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இந்நிலையில், கடந்த, மூன்று மாதங்களாக, பஞ்சு விலை குறைந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம், பஞ்சு விலை, 65 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போது, ஒரு கேண்டி விலை, அதிகபட்சமாக, 55 ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது. அதனால், இயல்பாக இருந்த நூல் ரகங்களின் விலை, சில மாதங்களாக குறைந்து வருகிறது. நூல் விலை கிலோ ஒன்றுக்கு, ஐந்து ரூபாய் குறைந்துள்ளது. நூல் ரகங்களின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், துணி ரகங்கள் விலையில் எவ்வித ஏற்றமும் ஏற்படவில்லை. இதுகுறித்து மில் உரிமையாளர் சந்திரன் கூறுகையில், தொடர்ந்து நூல் விலை குறைந்து வருகிறது. துணிகள் விற்பனையில்லாமல் தேங்கி உள்ளது. அதனால், ஜவுளி உற்பத்தியாளர்கள் துணி உற்பத்தியையும் குறைத்து வருகின்றனர். துணிகள் தேக்கம்
கடந்த பல மாதங்களாகவே துணி ரகங்களுக்கும் உரிய விலை கிடைக்காததால், பல கோடி மீட்டர் துணிகள் தேங்கியுள்ளன. துணி ரகங்ளை கேட்பார் இல்லாமல் உள்ளதால், ஜவுளி உற்பத்தியாளர்கள் செய்வதறியாது உள்ளனர். இதுகுறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறுகையில், வெளிநாட்டு ஆர்டர்கள் கிடைத்தால் தான், இங்கு உற்பத்தியாகும் காடா துணிகள் விற்பனையாகும். ஆனால், வெளிநாட்டு ஆர்டர்கள் தற்போது சுத்தமாக இல்லை. வடநாட்டிலும் மழை பெய்து வருகிறது. அதனால், பல கோடி மீட்டர் துணி ரகங்கள் தேங்கி கிடக்கின்றன. பாவு நூல் சப்ளையை நிறுத்தி விட்டோம். விற்கும் துணி ரகங்களுக்கும் உரிய பணம் வந்து சேருவதில்லை. நஷ்டம் ஏற்படாமல் இருக்க, உரிய விலை கிடைக்கும் போது, துணிகளை விற்கலாம் என்றால், அந்த நிலை எப்போது வரும் என்றுதான் தெரியவில்லை,' என்றனர். மொத்தத்தில் விசைத்தறி ஜவுளி தொழில், தற்போதைய நிலையில் கடும் நெருக்கடிகளில் சிக்கி தவிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், தொழில் முற்றிலும் முடங்கி, பல லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.